You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 11.50 மணியளவில், தைவானின் கிழக்குக் கரைக்கு அப்பால் 20கிமீ தூரத்தில் 6.4ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹொவாலியன் நகரில், பாதியளவில் சேதமடைந்த விடுதிகளிலிருந்தும், குடியிருப்பு கட்டடங்களிலிருந்தும் 150 பேரை அவசரகால பணியாளர்கள் மீட்டனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தின் புகைப்படங்களில், சாய்ந்த கட்டடங்கள், சிதறியுள்ள இடிபாடுகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை பார்க்க முடிகிறது.
சேதமடைந்த கட்டடங்களில் மருத்துவமனை ஒன்று மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தில், 10 அடுக்கு மாடி கொண்ட மார்ஷல் விடுதியும் சேதமடைந்துள்ளது.
அவ்விடுதியில் சிலர் சிக்கியுள்ளதை பார்த்ததாகவும், தங்கள் மொபைலில் உள்ள விளக்குகள் மூலம் தாங்கள் இருப்பதை அவர்கள் தெரிவித்ததாகவும் சம்பவத்தில் நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
சுமார் 40,000 வீடுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; நெடுஞ்சாலை மற்றும் பாலங்கள் மூடப்பட்டுள்ளன.
நகரில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் வரும் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. அவசர உதவிகளுக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
சுமார் 100,000 மக்கள் வாழும் ஹொவாலியன் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும்.
தலைநகர் தாய்பேயிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்த்தாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் நிலநடுக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட சிறு சிறு அதிர்வுகளால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.
பல தினங்களாக, தைவானில் சிறு சிறு அதிர்வுகள் ஏற்பட்டு வந்தன; மேலும் அங்கு இதற்கு முன் 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :