ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சக்திவாய்ந்த ராக்கெட் ஏவப்பட்டது

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து, 'ஃபால்கோன் ஹெவி' என்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஏவப்பட்டது. இது ஆற்றல் மற்றும் போக்குவரத்து தொழில்முனைவர் எலான் மஸ்க்கில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

ஜேக்கப் ஜுமா பதவி விலகுவாரா?

தற்போது நெருக்கடியில் இருக்கும் தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, தனது முன் நிபந்தனைகளின் பட்டியல் ஒப்புக்கொள்ளப்பட்டால் பதவி விலகலை அறிவிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிரில் ராமபோசா மற்றும் மற்ற தலைவர்களுடன் ஜுமா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இப்போது ஒரு ஒப்பந்தம் தயாராகிவருவதை இது தெளிவாகக் காட்டுவதாகவும் கூறுகிறார் தென் ஆஃப்ரிக்க பிபிசி செய்தியாளர்.

சிரியாவில் குண்டுவீச்சு

சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகில் போராளிகள் வசம் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவீச்சில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.

உத்தரவைத் திரும்ப பெற்ற மாலத் தீவு நீதிமன்றம்

மாலத் தீவில் இரண்டு நீதிபதிகள் கைதான சில மணி நேரத்தில், தண்டனைப் பெற்ற 9 அரசியல்வாதிகள் விடுவிப்பது என்ற தனது முடிவில் இருந்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் பின்வாங்கியுள்ளது. 'அதிபர் எழுப்பிய கவலைகளால்' இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என நீதிமன்றத்தில் மீதமுள்ள மூன்று நீதிபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாலத் தீவு அரசு 15 நாட்கள் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :