You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத் தீவில் 'அவசர நிலை': இந்தியர்களுக்கு முக்கிய அறிவுரை
அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாலத் தீவு அரசு 15 நாட்கள் அவசர நிலையைப் பிரகடனம் செய்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவை, அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டது.
தலைமை நீதிபதி அப்துல்லா சையத் மற்றும் மற்றொரு நீதிபதியான அலி ஹமீத்தும் செவ்வாய்க்கிழமை அதிகாலை விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.
விசாரணை மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த தகவலும் தரப்படவில்லை.
திங்கட்கிழமை மாலை நீதிமன்றத்தை போலீஸார் சுற்றி வளைத்தது முதல், மற்ற நீதிபதிகள் தங்களின் விருப்பத்திற்கு மாறாக நீதிமன்றத்திற்குள்ளே இருக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாலத் தீவு அரசு ஏற்கனவே 15 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளதுடன், முன்னாள் அதிபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த அவசர நிலை அறிவிப்பானது பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரங்களைத் தருவதோடு சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்யவும் உதவும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிநீக்கம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனால் அந்த 12 உறுப்பினர்களோடு எதிர் கட்சி பெரும்பான்மை பெரும் நிலை ஏற்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மீதான விசாரணை அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது எனக் குறிப்பிட்டது உச்சநீதிமன்றம். வெள்ளிக்கிழமை வெளியான உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த உறுதிமொழி தந்த காவல்துறை ஆணையரை அரசு பதவி நீக்கம் செய்தது. மேலும் மாலத் தீவுக்கு திரும்பிய இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிறை வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியர்கள் மாலத் தீவுக்கு தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :