You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: ரகசிய ஆவணம் குறித்து வெள்ளை மாளிகையுடன் மோதும் எஃப்.பி.ஐ
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ அவரது தேர்தல் பிரசார சமயத்தின்போது கண்காணிக்க தமது அதிகாரிங்களை தவறாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ரகசிய குறிப்புகளை வெளியிட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அந்தக் குறிப்புகளின் உண்மைத் தன்மை தொடர்பான சில தரவுகளை வெளியிடாமல் தவிர்ப்பது தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது.
வரும் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அந்த நான்கு பக்க ஆவணம், டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த டெவின் நியூன்ஸ் தலைமை வகிக்கும் நாடாளுமன்ற புலனாய்வு குழுவினரால் தொகுக்கப்பட்டது.
அதை வெளியிட வெள்ளை மாளிகையின் ஒப்புதல் தேவை. "ஒட்டுமொத்த உலகமும் பார்ப்பதற்காக அது விரைவில் வெளியிடப்படும்," என்று வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ஜான் கெல்லி கூறியுள்ளார்.
என்ன உள்ளது அந்தக் குறிப்பில்?
அமெரிக்க நீதித் துறை மற்றும் எஃப்.பி.ஐ ஆகியன Foreign Intelligence Surveillance Act எனப்படும் வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, டிரம்பின் பிரசாரக் குழு உறுப்பினர் ஒருவர் வேவு பார்க்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் மீதான நிரூபிக்கப்படாத குற்றசாட்டுகளைக் கூறி அவரை வேவு பார்க்க எஃப்.பி.ஐ நீதித்துறையின் அனுமதியைப் பெற்றதாக, 'ரஷ்யக் கோப்பு' எனப்படும் அந்த குறிப்பைப் பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
பிரிட்டனின் முன்னாள் உளவு அதிகாரியான கிறிஸ்டோபர் ஸ்டீல்-ஆல், ஹிலாரி கிளிண்டனின் பிரசார குழுவின் நிதி உதவியுடன் அந்த ஆவணம் தயார் செய்யப்பட்டது.
எதிர்வினையாற்றும் எஃப்.பி.ஐ
அந்த ஆவணம் வெளியிடப்படும் முன்பு அதை மாரு ஆய்வு செய்யத் தங்களுக்குக் குறைவான வாய்ப்புகளே இருந்ததாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது.
அதை வெளியிடுவது மிகவும் பொறுப்பற்ற செயல் என்று அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது.
டிரம்ப் தரப்பு என்ன சொல்கிறது?
டிரம்ப் எஃப்.பி.ஐ அமைப்பால் முறையாக நடத்தப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவிநீக்கம் செய்த பிறகு அவருக்குப் பதிலாக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆண்ட்ரு மெக்கஃபீ அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார் என்று கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மெக்கஃபீ ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கடந்த மாதம் அவர் பதவி விலகினார்.
இந்நிலையில், எஃப்.பி.ஐ. தொடர்பான அந்த குறிப்பை வெள்ளை மாளிகையிடம் ஒப்படைக்கும் முன்பு அதை குடியரசுக் கட்சியினர் ரகசியமாக திருத்தம் செய்ததாக டிரம்ப் எதிர்ப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்