You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் ஒரு பலவீனமான நாடு என்கிறார் ஹஃபீஸ் சயீத்
"எங்கள் இருவரையும் ஒரு தராசில் வைத்து யார் தீவிரவாதி என்பதை உலகம் முடிவு செய்ய வேண்டும்," என்று பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள ஜமா-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் கூறியுள்ளார்.
"டாக்காவுக்கு சென்ற மோடி, பாகிஸ்தானை இரு துண்டுகளாக்கியதில் தான் பங்களிப்பை வழங்கியதாகவும் அதை எட்டுவதற்கு ரத்தம் சிந்தியதாகவும் கூறினார்," என்று பிபிசியின் ஷுமைலா ஜெஃப்ரி உடனான நேர்காணலில் ஹஃபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர்கள் விலை வைத்து, தேடப்படும் தீவிரவாதி என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த 2008இல் நடைபெற்ற மும்பை தாக்குதல் தொடர்பாக அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அவரது அமைப்புக்கு பாகிஸ்தான் விதித்துள்ள தடை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "அமெரிக்கா, இந்தியாவின் ஆதரவாளரான பிறகு, அவர்களும் எங்கள் ஜேயுடி (ஜமாத்-உல்-தாவா) அமைப்பு மீது தடை விதிக்க பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் தருகிறார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் ஒரு பலவீனமான நாடு. இந்த சிக்கல்களால், இந்த நேரத்தில் எங்கள் மீது பாகிஸ்தான் தடை விதிக்கிறது. நீதிமன்றங்களுக்கு நாங்கள் செல்லும்போதெல்லாம், எங்கள் வாதங்களை அவர்கள் ஏற்றுள்ளனர். எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்
கடந்த காலங்களில் அவர் அமைப்பு மீதான தடையை நீக்கியது உள்ளிட்ட அவருக்கு ஆதரவான நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து பேசிய அவர், " இரண்டு நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஒரு கடுமையான அறிக்கையை எங்களுக்கு எதிராக வெளியிட்டார். அவற்றை அவர் பிபிசி நேர்காணலில் குறிப்பிட்டார். இப்போது அதற்காக அவர் எங்களுக்கு விளக்கம் கூறிவருகிறார்," என்று கூறியுள்ளார்.
ஒரு அமைச்சர் அவருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய காரணம் சயீத் மீதான அச்சமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " அவர்களுக்கு பயமில்லை. நல்லவேளையாக நானோ எனது கட்சியோ எதுவும் கொடுக்காததால் யாரும் பயப்பட வேண்டியதில்லை. பிரச்சனை என்னவென்றால் பாகிஸ்தான் ஒரு பலவீனமான நாடு. பாகிஸ்தானுக்கு நிதிப் பிரச்சனைகள் உள்ளன. அரசாங்கத்துக்கு மற்ற நாடுகளில் இருந்து எப்போதும் நிதியுதவி தேவைப்படுகிறது," என்று கூறினார்.
"தனது சொந்த காலில் நிற்கும் வாய்ப்பை பாகிஸ்தான் எதிர்நோக்குகிறது. அமெரிக்காவிடம் அதன் நிதியுதவி தேவையில்லை என்பதை பாகிஸ்தான் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது," என்று அமெரிக்காவின் நிதி உதவி ரத்து போன்று ராஜீய ரீதியாக பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் விவகாரங்கள் பற்றிப் பேசும்போது ஹபீஸ் சயீத் தெரிவித்தார்.
ஆனால், பாகிஸ்தானுக்கு நிதி உதவி ரத்து செய்யப்பட்டபின், அவரது ஃபலா-ஐ-இன்சானியாட் அறக்கட்டளை, ஜமா-உத்-தாவா ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தானில் நடவடிக்கை எடுக்கடுவது குறித்த கேள்விக்கு, "எங்களுக்கு எதிராக எது நடந்தாலும் நாங்கள் நீதிமன்றங்களில் அவற்றை எதிர்கொள்வோம்," என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசியலில் பங்கெடுப்பது, அந்நாட்டு ராணுவத்துடன் அவருக்கு இருக்கும் தொடர்பு ஆகிவை பற்றிப் பேசிய சயீத், " தற்போது நாங்கள் ஒருங்கிணைந்து, பாகிஸ்தான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். இந்த நோக்கத்துடனேயே பாகிஸ்தான் அரசியலுக்குள் நாங்கள் நுழைகிறோம்," என்றார்.
"பாகிஸ்தான் மக்கள் என்னை புரிந்துள்ளனர். நான் யார் என்பதை அவர்கள் புரிந்துள்ளனர்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறைவன் மனது வைத்தால் மில்லி முஸ்லிம் லீகை தளமாகப் பயன்படுத்தி அரசியலுக்கு வருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நேர்க்காணலில் ஹஃபீஸ் சயீத் தெரிவித்துள்ள கருத்துகளுக்கான எதிர்வினையைப் பெற இந்திய அரசை பிபிசி அணுகியது. இந்தியாவின் பதில் கிடைக்கும்போது அது செய்தியில் வெளியிடப்படும்.
பிற செய்திகள்:
- இரானில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஏன்?
- சீனாவின் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?
- டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தில் உள்ள 11 அதிரடித் தகவல்கள்
- பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை நிறுத்திய அமெரிக்கா
- நடைமுறையை புரிந்து கொள்ளாமல் மக்கள் மீது பழி போடுகிறாரா கமல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :