You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெரு: மலை முகட்டில் இருந்து பேருந்து விழுந்து 48 பேர் பலி
பெரு நாட்டில் மலை முகட்டில் இருந்து தவறி சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் ஒரு பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்த விபத்தில் குறைந்தபட்சம் 48 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் சிதைவுகளில் இருந்து இதுவரை ஆறு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று பெரு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
தலைநகர் லிமாவின் தெற்கே இருக்கும் பசமயோவில் 'சாத்தானின் வளைவு' எனப் பொருள்படும், கர்வா டெல் டையாப்லோ என்ற பெயருடைய இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
லிமாவில் இருந்து ஹுவாசோ நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் 55 பேர் பயணம் செய்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகமாகக் காற்று வீசும் பசிபிஃக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள அந்த வளைவு பெருவில் உள்ள மிகவும் ஆபத்தான வளைவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
"இப்படி ஒரு பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது, ஒட்டுமொத்த நாட்டுக்கே துயரைத் தருகிறது," என்று கூறியுள்ள பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ கூட்சின்ஸ்கீ, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் வேறு ஒரு வாகனத்துடன் மோதியதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, இந்த விபத்து நிகழ்ந்திருப்பது போல தெரிகிறது என்றும் பெரு போக்குவரத்துத் துறை தலைமை அதிகாரி டினோ எஸ்கூடேரா தெரிவித்துள்ளார்.
போதிய வெளிச்சமின்மை மற்றும் கடல் ஓதம் உயர்ந்தது ஆகிய காரணங்களால், ஓர் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீட்புப் பணிகள், ஹெலிகாப்டர் ஒன்றின் உதவியோடு நடைபெற்று வருகின்றன.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்