ஒகி புயல்: வீடு திரும்பாத மீனவர்களை இறந்தவர்களாகக் கருதி பூசை

ஒகி புயலின்போது காணாமல் போய், கிறிஸ்துமசுக்கும் வீடு திரும்பாத மீனவர்களுக்கு, குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையோர கிராமங்களின் தேவாலயங்களில் நினைவுப் பூசைகள் நடத்தப்பட்டுள்ளன.

புயலில் சிக்கித் திரும்பியபின் சீர் செய்யப்படும் ஒரு மீன்பிடிப்படகு.
படக்குறிப்பு, புயலில் சிக்கித் திரும்பியபின் சீர் செய்யப்படும் ஒரு மீன்பிடிப்படகு.

உயிரிழந்தவர்களுக்கு நடத்தப்படும் நினைவுப் பூசைகள் இவை.

மீனவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இந்த மீனவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர்.

அதே நேரம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி இன்னும் தொடர்ந்து வருவதாகவும், இப்பணி முடிந்தும் கண்டுபிடிக்கப்பட முடியாதவர்களுக்கு ஏழாண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்கிற விதியைத் தளர்த்தி உடனடியாக அரசின் உதவிகள் வழங்கப்படும் என்றும் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

தமிழ்நாட்டின் மேற்குக் கடற்கரையோரம் உள்ள நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, இறைவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இறையுமன்துறை ஆகிய இக் கிராமங்களின் மீனவர்கள் பல நூறு நாட்டிகல் மைல் தொலைவு சென்று ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபடுகிறவர்கள்.

நவம்பர் 29ல் ஒகி புயல் தொடங்கியபோது இவர்களில் ஏராளமானவர்கள் கடலில் இருந்தனர். புயலில் சிக்கிய இவர்களை மீட்பதற்கு போதிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், உரிய நடவடிக்கை கோரி, மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒகி புயலின் பாதிப்பு பற்றியும், மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை பற்றியும் மனித உரிமை ஆர்வலர்கள் பொது விசாரணை ஒன்றினை கடந்தவாரம் நடத்தினர்.

மனித உரிமை அமைப்புகள் நடத்திய பொது விசாரணை.
படக்குறிப்பு, ஒகி புயலில் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வள்ளவிளையில் நடந்த ஒரு பொது விசாரணை.

மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.ஜி.கோல்சே பாட்டில், ஜிண்டால் லா ஸ்கூலின் பேராசிரியர் ஷிவ் விஸ்வநாதன், கிழக்கு தைமோர் தொடர்பான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் முன்னாள் செயலாளர் டி.ஜே.ரவீந்திரன், தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ராமாத்தாள், தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் ஏடிஜிபி நாஞ்சில் குமரன் உள்ளிட்டோர் இந்த விசாரணையில் பங்கேற்றதாக 'பீப்பிள்ஸ் வாட்ச்' அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஐ.ஆசிர்வாதம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த எட்டு கிராமங்களில் இருந்து ஒகி புயலுக்கு முன்பு கடலுக்குச் சென்ற 240-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும், இனி அவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும், எனவே அவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அரசு தரவேண்டும் என்றும் அவர் ஆசிர்வாதம் வலியுறுத்தினார்.

எவ்வளவு தூரம் மீன்பிடிக்கச் சென்றிருந்தாலும் மீனவர்கள் தவறாமல் கிறிஸ்துமசுக்கு முன்பு வீடு திரும்பும் வழக்கமுடையவர்கள் எனவே, கிறிஸ்துமசுக்கும் வீடு திரும்பாதவர்கள் இறந்துபோனதாக உறுதியாக நம்பி தேவாலயங்களில் அவர்களுக்குப் பூசைகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பது பற்றி அரசு எந்த முடிவுக்கும் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்துறையில் 40 மீனவர்களுக்கும், வல்லவிளையில் 33 மீனவர்களுக்கும், நீரோடியில் 34 மீனவர்களுக்கும், இ.பி.துறையில் 6 மீனவர்களுக்கும், தூத்தூரில் 11 மீனவர்களுக்கும், பூத்துறையில் 18 மீனவர்களுக்கும், இறையுமன்துறையில் 2 மீனவர்களுக்கும், மார்த்தாண்டம் துறையில் 7 மீனவர்களுக்கும் தேவாலயங்களில் நினைவுப் பூசைகள் செய்யப்பட்டன என்று பாதிரியார் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார்

பட மூலாதாரம், RUN SANKAR/AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, அமைச்சர் டி.ஜெயக்குமார்.

இதைத் தொடர்ந்து 8-ம் நாள் அல்லது 30-ம் நாள் செய்யவேண்டிய நினைவுத் திருப்பலிகளும் இந்த மீனவர்களுக்கு தனித்தனியாக செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய சின்னத்துறையைச் சேர்ந்த மீனவர் ராஜன், "வழக்கமாக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும்போது, 10-15 நாள்கள் கடலில் இருப்பதற்குரிய பொருள்களைத்தான் கொண்டு செல்வர் எனவே அவர்கள் இத்தனை நாள் தாக்குப்பிடித்திருக்க முடியாது என்பதாலும், அவர்கள் கிறிஸ்துமசுக்கும் வீடு திரும்பவில்லை என்பதாலும் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை," என்கிறார்.

"சின்னத்துறையைப் பொறுத்தவரை மூழ்கிய இரண்டு படகுகளில் இருந்து தலா இரண்டு பேர் தப்பி வந்தனர். அவர்கள், தங்கள் படகுகளில் இருந்த 16 பேர் மூழ்கி இறந்ததை தங்கள் கண்ணாலேயே காண நேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக, சின்னத்துறையில் திரும்பி வராத 40 பேரில் 16 பேர் இறந்ததற்கு கண்ணால் கண்ட சாட்சி உள்ளது. இதுவரை மீட்கப்பட்டவர்களாக அரசால் கணக்கு கூறப்பட்டவர்கள், பெரும்பாலும் தாமே கரை சேர்ந்தவர்கள் அல்லது கேரளத்தில் இருந்து சென்ற கப்பல், விமானத்தால் மீட்கப்பட்டவர்கள் மட்டுமே. தமிழகத்தில் இருந்து மீட்புப் படை சென்று மீட்டவர்கள் என்று எவருமே இல்லை," என்கிறார் ராஜன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அரசின் கணக்குப்படி 3020 மீனவர்கள் வந்துவிட்டதாகவும், இன்னும் 211 மீனவர்களும், 18 படகுகளும் இன்னும் திரும்பி வரவில்லை என்றும் கூறினார். "ஆளில்லாத சில தீவுகளில் இந்த மீனவர்கள் கரை ஒதுங்கியிருக்க வாய்ப்புள்ளது என்று நினைப்பதால், தமிழக அரசு படகு, எரிபொருள் ஆகியவை அளித்து மீனவர்கள் உதவியோடு இத்தீவுகளில் தேடும்பணி நடந்து வருகிறது," என்றார் அவர்.

"முன்பு காணாமல் போன மீனவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அறிவிக்க ஏழாண்டுகள் காத்திருக்கவேண்டும். பிறகு இரண்டாண்டுகளில் அறிவிக்கிற முறை வந்தது. ஆனால், தற்போது நடக்கும் இத்தேடுதல் பணி முடிந்ததும், கண்டுபிடிக்க முடியாத இறந்திருக்க வாய்ப்புள்ள மீனவர்கள் யார் யார் என்பதை வருவாய்த்துறை செயலாளர், கால்நடைத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு ஒரு ஒன்று ஆய்வு செய்து முடிவு செய்யும்.

இறந்துவிட்டதாக இக்குழு அறிவிக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு ஏழாண்டுகளோ, இரண்டாண்டுகளோ காத்திருக்காமல் உடனடியாக தலா.ரூ.20 லட்சம் உதவித்தொகை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற உதவிகள் வழங்கப்படும்," என்று மேலும் தெரிவித்தார் ஜெயக்குமார்.

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :