மொபைல் ஃபோன்களால் துருக்கியின் விசில் 'பறவை மொழிக்கு' ஆபத்து

துருக்கியின் வடபகுதியிலுள்ள கருங்கடல் கிராம மக்கள் பேசும் ஒருவித "பறவை மொழியை" அவசர பாதுகாப்பு தேவைப்படும் அருகிவரும் உலக பாரம்பரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சாரங்களுக்கான அமைப்பு அறிவித்துள்ளது.

கரடுமுரடான மலை நிலப்பரப்பில் நீண்ட தூரத்தில் உள்ளவர்களை தொடர்புகொள்வதற்காக, கெய்சுன் மாகாணத்தின் கான்கிச்சி மாவட்டத்தில் சுமார் 10,000 பேர் மேம்படுத்தப்பட்ட விசிலடிக்கும் முறையை மொழியாக பயன்படுத்துவதாக யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக, "அவசர பாதுகாப்பு தேவைப்படும் கலாச்சார பாரம்பரிய பட்டியலில்" இம்மொழி இணைவதாகவும், மொபைல் ஃபோன்களின் அதிகமான பயன்பாடு "இம்மொழியின் முக்கிய அச்சுறுத்தல்" என்று யுனெஸ்கோ கூறுகிறது.

துருக்கியின் கலாசார அமைச்சர் நூன் குர்டுலூமஸ், இந்நடவடிக்கையை வரவேற்றத்துடன், இக்கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் "கருங்கடல் பகுதி வாசிகளுக்கு" ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்புவரை ட்ராப்சன், ரைஸ், ஆர்டு, ஆர்ட்டிவ் மற்றும் பைபர்ட்டின் ஆகிய பகுதிகளிலும் பரவலாக பேசப்பட்ட இம்மொழி தற்போது குஸ்காய் கிராமத்தில் மட்டுமே பேசப்படுகிறது. அக்கிராமத்தின் பெயரான குஸ்காய் "பறவை கிராமம்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

அப்பகுதிகளில் வாழும் சில,"ஆடு மேய்ப்பவர்கள் மட்டுமே இம்மொழியின் சில வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்" என்று துருக்கிலுள்ள நாளேடான ஹுரியேட் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வருடாந்திர பறவை மொழி விழாவின் மூலம் மொழியை காப்பாற்றும் நடவடிக்கையில் குஸ்காய் கிராமம் ஈடுபட்டுள்ளது. மேலும், பறவை மொழி கலாச்சார சங்கத்தின் தலைவரான செரெஃப் கோசெக், இச்செய்தியை உள்ளூர் மக்கள் "ஒரு கனவு நனவானது போன்ற மகிழ்ச்சியுடன்" வரவேற்றுள்ளதாக மில்லியெட் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் மாவட்ட அதிகாரிகள் தொடக்க பள்ளிகள் அளவில் இம்மொழியை கற்பிக்கும் பணியை தொடங்கினர் என்று ஹுரியேட் நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் உள்ள மற்ற விசித்திரமான குஸ்காயின் போன்ற பறவை மொழியானது, "ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை" எனில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளதாக யுனெஸ்கோ எச்சரிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :