பாகிஸ்தான்: தேவாலயத்தில் நடந்த பயங்கர தாக்குதலில் 8 பேர் பலி

பட மூலாதாரம், AFP
பாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்
ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவெட்டா நகரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலை தான் நடத்தியதாக ஐ.எஸ் குழு கூறியுள்ளது.
15 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மெதடிஸ்ட் தேவாலயத்தில் பிராத்தனைகள் நடந்துகொண்டிருந்த போது தாக்குதல் நடைபெற்றதாக இந்தப் பிராந்தியத்தின் உள்துறை அமைச்சர் சர்பராஸ் பக்டி உள்ளூர் ஊடகத்தில் கூறினார்.
இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தேவாலயத்தின் வாசலிலே தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அவர்கள் தடுக்கப்படவில்லை என்றால் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருப்பார்கள் என சர்பராஸ் பக்டி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி, தாக்குதல் நடந்த இடத்தினை சுற்றி வளைத்ததாக உள்ளூர் உருது தொலைக்காட்சிகள் கூறுகின்றன.
துப்பாக்கிச்சூடு நடந்தபிறகு குறைந்தது ஒரு வெடிகுண்டு தாக்குதலும் நடந்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தப் பிராந்தியத்தில் தாக்குதல் நடப்பது அரிதானது அல்ல. ஹசாரா ஷியா சமூகத்தை குறி வைத்து, இங்கு அடிக்கடி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடக்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












