வடகொரியாவின் உளவாளியாக செயல்பட்டவர் ஆஸ்திரேலியாவில் கைது

வடகொரியாவின் பொருளாதார முகவராக செயல்பட்ட குற்றச்சாட்டில், சிட்னியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

பேரழிவிற்கான ஆயுதங்கள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்ததாகவும், சட்டவிரோதமாக அவற்றை ஏற்றுமதி செய்ய தரகராக செயல்பட்டதாகவும் 59 வயதான சன் ஹன் ச்வே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வடகொரியா மீது ஐ.நா மற்றும் ஆஸ்திரேலியா விதித்துள்ள பொருளாதார தடைகளை இவர் மீறி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த சன் ஹன் ச்வே மீது இது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 1995 ஆம் ஆண்டின் பேரழிவு ஆயுதங்கள் (பரப்புதல் தடுப்பு) சட்டத்தின் கீழ் இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

வடகொரியாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சன் தொடர்பில் இருந்ததிற்கான ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

வடகொரிய அரசுக்கு வருமானத்தை உருவாக்கும் வகையில், பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்பு சேவைகளை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியாவில் இருந்து இந்தோனீசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு நிலக்கரி விற்பனை செய்ய தரகராக செயல்பட்டதாகவும் சன் ஹன் ச்வே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

30 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய குடிமகனாக இருக்கும் இவர், கொரிய மரபைச் சார்ந்தவர் என காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.

விசுவாசமுள்ள முகவர் என்றும் பெரும் தேசப்பற்று நோக்கத்துடன் செயல்படுவதாக அவர் நம்பினார் என்றும் சன் ஹன்னை காவல்துறையினர் விவரித்தனர்.

இது அனைத்தும் வெளிநாடுகளில் நடப்பதால், சன்னின் எந்த நடவடிக்கைகளும் ஆஸ்திரேலியர்கள் மீது "நேரடி ஆபத்தை" வெளிப்படுத்தவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.

"இந்த குற்றச்சாட்டுகள் ஆபத்தானவை போல இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணிற்குள் எந்த ஆயுதங்களோ ஏவுகணைகளோ வரவில்லை" என்று ஆஸ்திரேலிய காவல்துறையின் உதவி ஆணையர் நீல் கோஹன் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சன்னுக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம். அவர் ஜாமினிலும் வெளிவர முடியாது.

டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து விலகி இருக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம், வடகொரியா தங்களுக்கு கடிதம் எழுதியதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது.

அதே போல, கிம் ஜாங்-உன் அரசுக்கு எதிராக அமெரிக்கக் கொள்கைகளை பின்பற்றினால், ஆஸ்திரேலியா "பேரழிவை சந்திக்க நேரிடும்" எனவும் ஏற்கனவே வடகொரியா எச்சரித்திருந்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :