You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“பருவநிலை மாற்றத்தின் விளைவே கலிஃபோர்னிய காட்டுத்தீ” - எச்சரிக்கும் மாகாண கவர்னர்
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவு காட்டுத்தீ தற்போது "புதிய இயல்பாக" மாறி வருவதாக கலிஃபோர்னியாவின் கவர்னர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நாட்களில் தெற்கு கலிபோர்னியாவை அழித்து வரும் பெருமளவிலான தீயானது, "ஒவ்வொரு ஆண்டும் அல்லது சில ஆண்டுக்கொருமுறை நடக்கும்" என்று ஜெர்ரி பிரவுன் கூறியுள்ளார்.
"இந்த மாநிலத்தில் நாங்கள் ஒரு புதிய யதார்த்தத்தை எதிர்கொண்டு வருகிறோம்," என்று அவர் மேலும் கூறினார். லாஸ் ஏஞ்சலஸுக்கு வடக்கே உள்ள வென்சுரா பகுதியில் ஏற்பட்டுள்ள சேதத்தை ஆய்வு செய்த பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர்.
காலநிலை மாற்றம் பற்றிய டிரம்ப் அரசின் நிலைப்பாட்டை தாக்கிய ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவரான பிரவுன், "நாங்கள் இந்த மாநிலத்தில் ஒரு புதிய யதார்த்தத்தை எதிர்கொண்டுள்ளோம், அதனால் நமது மக்களின் உயிர்கள், பொருட்கள், அவர்களின் சுற்றுப்புறங்களையும் மற்றும் பல பில்லியன்கணக்கான டாலர்கள் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
"காலநிலை மாற்றத்தால், தெற்கு கலிஃபோர்னியாவே எரிந்து வருவதாக சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்."
தாமஸ் தீ என்றழைக்கப்படும் இந்த காட்டுத்தீயால் இதுவரை 150,000 ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக ராய்ட்டர்ட்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று தீப்பிழம்புகளை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முன்னேறத் தொடங்கினர்.
என்ன நடந்தது?
தெற்கு கலிஃபோர்னியாவில் ஆறு பெரிய காட்டுத்தீக்களும், சில சிறியளவிலான காட்டுத்தீக்களும் திங்கட்கிழமை இரவு ஏற்பட்டது. அதிக காற்றினால் உந்தப்பட்ட காட்டுத்தீ சில மணிநேரங்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை கடந்து சென்றது.
தீயானது தீவிரமான வானிலையுடன் கூடிய குறைந்த ஈரப்பதம் மற்றும் வறண்ட நிலப்பகுதியின் காரணமாக மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியது.
மிக உயர்ந்த நிலை எச்சரிக்கையான ஊதா எச்சரிக்கையை அதிகாரிகள் வெளியிட்டனர். இது "மிகவும் தீவிரமான தீ விபத்தை" குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
தாமஸ் தீயின் பெரியளவிலான பாதிப்பானது வென்சுரா பகுதியில் ஏற்பட்டு அது பசிபிக் கடற்கரை வரையும் மற்றும் 466 கிலோ மீட்டர் தூரமும் பரவியுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் கலிஃபோர்னியா மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த சுமார் 5,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்