You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிம்பாப்வே: முகாபேக்கு பிறகு அதிபராகிறார் முனங்காக்வா?
ஜிம்பாப்வேயில் நீண்டகாலம் அதிபராக இருந்த ராபர்ட் முகாபேவினால் துணை அதிபர் பதவியில் இருந்து இருவாரங்கள் முன்பு நீக்கப்பட்ட எமர்சன் முனங்காக்வா, அந்நாட்டின் புதிய அதிபராக சில மணிநேரங்களில் பதவியேற்கக்கூடும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தென் ஆஃப்ரிக்காவில் இருந்து தப்பி சென்ற எமர்சன் முனங்காக்வா புதன்கிழமை திரும்பி வரவிருப்பதாக ஸானு-பிஎஃப் கட்சி தெரிவித்துள்ளது.
முனங்காக்வாவை பதவி நீக்கம் செய்த நடவடிக்கை, கட்சியையும், ராணுவத்தையும் இந்தப் பிரச்சனையில் தலையிட செய்தது. முகாபேயின் 37 ஆண்டுகால நீண்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் இது அமைந்துவிட்டது.
முகாபே பதவி விலகவுள்ள செய்தி பரவியதும், நாடு முழுவதும் இரவிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
93 வயதான அதிபர் முகாபே தாம் பதவி விலகுவதாக அனுப்பிய கடிதம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அதனால், முகாபேயை பதவி நீக்கம் செய்யும் நாடாளுமன்ற நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
அதிகார மாற்றம் சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்காக தான் பதவி விலகுவதாகவும், இந்த முடிவை தானே சுயமாக எடுத்ததாகவும் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தில் முகாபே குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற தேர்தல் வரை 71 வயதாகும் முனங்காக்வா நாட்டை ஆள்வார் என்று ஸானு-பிஎ.ப் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
கிரின்விச் நேரப்படி 11.30 மணிக்கு முனங்காக்வா ஜிம்பாப்வே வந்தடைவார் என்றும், புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை பதவியேற்பார் என்றும் அவருடைய கூட்டாளிகளில் ஒருவரான லாரி மாவ்ஹி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய அரசியல் தந்திரத்தால் "முதலை" என்ற புனைபெயர் பெற்றுள்ள மனங்காக்வா, நாடு கடந்த நிலையில் இருந்து கொண்டு நாட்டை மீள கட்டமைக்க ஜிம்பாப்வே மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார்.
"ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அமைதியான அதிகார மாற்றத்தையும் நாம் அனைவரும் ஒன்றாக உறுதி செய்வோம். ஜிம்பாப்வே மக்கள் அனைவருக்கும் புதிய தொடக்கத்தை கொண்டு வருவோம். அமைதியையும், ஒற்றுமையையும் வளர்த்துக்கொள்வோம் என்று செவ்வாய்க்கிழமை மனங்காக்வா ஜிம்பாப்வேயின் நியூஸ்டேயிடம் தெரிவித்துள்ளார்.
அதிபர் ராபர்ட் முகாபே துணை அதிபர் மனங்காக்வாவை பதவி நீக்கம் செய்தது, இதற்கு முன்னர் இல்லாத அரசியல் நெருக்கடியை நாட்டில் தோற்றுவித்தது.
இந்த நடவடிக்கை தனக்கு பின்னர் மனைவி கிரேஸ் முகாபேயை அதிபராக்குவதற்கான முயற்சி என்று பலராலும் பார்க்கப்பட்டது.
இதனால், ஜிம்பாப்வே ராணுவம் இதில் தலையிட்டு. அதிபர் முகாபேயை வீட்டுச் சிறையில் வைத்தது.
அரசமைப்புச் சட்டத்தின்படி தற்போதைய துணை அதிபர் பெலெகசெலா முபோகோ-வே அடுத்த அதிபராக முடியும். முகாபேயின் மனைவி கிரேசின் ஆதரவாளரான அவர் தற்போது நாட்டில் இல்லை என்று நம்பப்படுகிறது. ஸானு-பிஎஃப் கட்சியால் அவர் வெளியேற்றபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில், முகாபே அதிகாரத்தை ஒப்படைத்திருப்பதால் மாற்றங்கள் ஏதாவது நிகழுமா என்று சிலர் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
பிற செய்திகள்
.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்