You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதியின் சொந்த கிராமத்திற்கு சென்றடையாத “தூய்மை இந்தியா” திட்டம்
- எழுதியவர், பிரியங்கா துபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
குஜராத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த நகரமான வாட்நகரை அடைந்தபோது, இந்திய அரசு தன்னுடைய லட்சிய திட்டமாக செயல்படுத்துகின்ற 'ஸ்வச் பாரத் அபியான்' அல்லது "தூய்மை இந்தியா" திட்டத்தின் செயல்பாடு மந்தமாக இருப்பதை உணர முடிந்தது.
மெக்சனா மாவட்டத்திலுள்ள வாட்நகர் நகராட்சியில்தான், பிரதமர் நரேந்திர மோடி பிறந்து, தன்னுடைய வாழ்க்கையின் தொடக்க நாட்களை கழித்தார்.
பிரதமரின் சொந்த கிராமமாக இருப்பதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக வளர்க்கப்பட்டு வருகிறது.
வாட்நகரில் தலித்துக்கள் வாழும் ரோஹித் வாஸ் என்ற இடத்திற்கு பிபிசி செய்தியாளர் சென்றபோது, "நீங்கள் வாட்நகர் வைஃபை மண்டலத்தில் நுழைந்துள்ளீர்கள்" என்ற செய்தி அவருடைய திறன்பேசியில் காட்டியது.
அரசால் அளிக்கப்படும் பொது வைஃபை வசதி சிறப்பாகவே வேலை செய்தது. ஆனால், பக்கத்திலுள்ள கழிவறைப்பற்றி அவர் கேட்டபோது, திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு பயன்படுத்தும் அருகிலிருந்த மைதானத்தை உள்ளூர்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
சுமன், ஹெட்வி, மோனிகா, பிஸ்வா, அன்கிதா மற்றும் நேஹா ஆகியோர் வாட்நகரின் ரோகித் வாஸ் மோஹால்லாவைச் சேர்ந்த பள்ளி செல்லும் மாணவிகள்.
அவர்களிடம் கழிவறை வசதிகள் பற்றி கேட்டபோது, இந்த மாணவிகள், தினமும் காலையில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் மைதானத்திற்கு பிபிசி செய்தியாளரை அழைத்து சென்றனர்.
வாட்நகரிலுள்ள ரோஹித் வாஸில் சாக்கடைகள் எல்லாம் திறந்தே காணப்படுகின்றன என்கிறார் 30 வயதான தான்ஷா பென்.
"சிறிய குழந்தைகளும், இளம் பெண்களும் மைதானத்திற்கு சென்று திறந்தவெளியில்தான் மலம் கழிக்க வேண்டும். எங்களுக்கு வாழ்வதற்கு வீடு இல்லை. எங்களுக்கு யாரும் வீடுகள் வழங்கவில்லை. கழிவறைகள் பற்றியும் யாரும் கேட்பதில்லை. தினமும் நாங்கள் திறந்தவெளியில்தான் மலம் கழித்து வருகின்றோம்" என்று அவர் மேலும் கூறினார்.
தான்ஷா பென்னுக்கு அடுத்தாக வாட்நகரவாசியும், இல்லத்தரசியுமான நிர்மலா பென் வாழ்ந்து வருகிறார்.
வாட்நகரவாசிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை மோதி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"எங்களுடைய வீடுகள் கூரையுடனும், நல்ல கழிவறையுடனும் இருக்கும் என்று எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 8ஆம் தேதி வாட்நகருக்கு பிரதமர் வந்ததை பற்றி குறிப்பிடுகையில், அவர், "தற்போது தேர்தல் வருவதால், அவர்களுக்கு எங்களையும் பழைய சொந்த கிரமமான வாட்நகரும் நினைவுக்கு வந்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக எங்களுடைய பிரச்சனைகளை கேட்க யாரும் வரவில்லை. எங்களுக்கு யாரும் செவிமடுக்கவும் இல்லை.
வாட்நகரவாசிகளின் கூற்றுப்படி, சுமார் 30 ஆயிரம் மக்கள் தொகை உள்ள இந்த நகரில் 500 வீடுகளில் கழிவறை வசதி இல்லை.
இந்த 500 வீடுகளும் ரோஹித் வாஸ், ஓட் வாஸ், போய்வாஸ், தாக்குர் வாஸ் மற்றும் தேவிபூஜாக் வாஸ் உள்பட பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தலித் மெஹல்லாஸ் பிரிவினருக்கு சொந்தமானவை ஆகும்.
திறந்த சாக்கடை, அடைபட்ட வடிகால்கள் மற்றும் உடைந்த சாலைகளுக்கு நடுவில், பிபிசி செய்தியாளர் நடந்து, ரோஹித் வாஸின் குறுகலான சந்துகளில் முன்னேறி சென்றபோது, ஓர் அறையுடைய தங்களுடைய வீடுகளுக்கு முன்னால், பெண்கள் துணிகளை துவைத்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
நவீன மருத்துவ மற்றும் தொழிற்நுட்ப வசதிகளோடு, வாட்நகரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக வளர்ப்பதற்காக ரூபாய் 550 கோடி நிதி வழங்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த நிதியில்தான், ரூபாய் 450 கோடியில் வாட்நகரில் பல்சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை கட்டியமைப்பதற்கான லட்சிய திட்டமும் உள்ளடங்குகிறது.
இந்த அறிவிப்புக்கள் எல்லாம் சிவப்பு தகர டப்பாவில் தண்ணீரை கொண்டு சென்று. தினமும் காலையில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் 70 வயதான மணி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.
ரோஹித் வாஸ் மொஹல்லாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்று மலம் கழிப்பதற்காக இருக்கும் இரண்டு திறந்தவெளி மைதானங்கள், 'தூய்மை இந்தியா' திட்டத்தில் ஊரக இந்தியாவில் கழிவறைகளை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த கிராமத்தை சென்றடையவில்லை என்பதற்கான தெளிவாக சாட்சியமாக உள்ளது.
அட்கி பென், லக்ஷ்மி பென் மற்றும் அமி பென் ஆகிய மொஹல்லாவின் மூத்த பெண்களின் குழு மணி பென் அருகிலேயே நிற்கிறது.
வாட்நகர் பற்றி ஊடகங்கள் வெளியிட்டுள்ள திகைப்பூட்டும் அரசாங்கத் திட்டங்கள் பற்றிய எந்தவொரு தகவல்களும் இவர்களுக்கு தெரியவில்லை.
இந்த பெண்கள் தங்களுடைய வீடுகளில், காங்கிரீட்டால் கட்டப்பட்டு செயல்படும் கழிவறைக்காக இன்னும் காத்திருக்கின்றனர்.
அவர்களின் மண்ணின் மைந்தரான இந்திய பிரதமர் நரோந்திர மோடிக்கு என்ன செய்தி வழங்க எண்ணுகிறீர்கள் என்று ரோஹித் வாஸ் மெஹல்லா பெண்களிடம் பிபிசி செய்தியாளர் கேட்டபோது, எல்லோரும் கழிவறை கட்டித்தர வேண்டும் என்று கோரினர்.
பிபிசி செய்தியாளர் புறப்பட தயாரானபோது, அவரை நெருங்கி வந்த லக்ஷமி பென், திறந்தவெளியில் மலம் கழிக்க செல்வது என்பது பெண்களை அவமதிப்பதும், அவமானப்படுத்துவதும் ஆகும்.
எனவே, அவர்களை பொறுத்தமட்டில் வரவிருக்கும் குஜராத் தேர்தலில் கழிவறைகள் கட்டி தருவது மிக பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்