You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தார் டிரம்ப்
ஒன்பது ஆண்டுகளுக்கு பின், வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
திங்களன்று அமைச்சரவை கூட்டத்தில் பேசிய டிரம்ப், கூடுதல் தடைகள் குறித்து செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்றார்.
வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தை குற்றஞ்சாட்டிய டிரம்ப், சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை அந்நாடு ஆதரிப்பதாக கூறினார்.
வெள்ளை மாளிகையில் இந்த முடிவை அறிவித்த அவர், "நீண்ட நாட்களுக்கு முன்பே இது நடந்திருக்க வேண்டும்" என்றார்.
வட கொரியாவுக்கு பெட்ரோலிய எண்ணெய்ப் பொருட்கள் விற்க தடை, வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட அந்நாட்டிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை கடந்த செப்டம்பரில் அமெரிக்கா முன்மொழிந்தது.
இதனை தொடர்ந்து ஆறாவது அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை செலுத்துதல்களை செய்தது வட கொரியா.
டிரம்பின் இந்த குறியீட்டால் கிம்மின் நடவடிக்கைகளை தடுக்கும் சாத்தியம் இல்லை.
டொனால்டு டிரம்பின் இந்த முடிவு, பியாங்யாங்கை மீண்டும் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது.
வட கொரியாவை தூதரக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்த, நிர்வாக கொள்கையின் ஒரு பகுதியாக இந்நகர்வு பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு அணு ஆயுத திட்டத்தை வட கொரியா கைவிட வேண்டும் என வற்புறுத்தும் முயற்சிகளை சிக்கலாக்கும் என்று சிலர் கூறுகின்றனர். எனினும், அவற்றை கைவிடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுத திட்டத்தை நிறுத்த வட கொரியா மறுத்துவிட்டது.
ஏற்கனவே விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளையும் மீறி, அணு ஆயுதங்களையும், ஏவுகணை திட்டங்களையும் தொடர்ந்து வருகிறார் வட கொரிய அதிபர் கிம்.
அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணையை உருவாக்குவது மற்றும் ஹைட்ரஜன் குண்டு ஒன்றை உருவாக்கியுள்ளது போன்ற வட கொரியாவின் எந்த திட்டத்தையும் கிம் ரகசியமாக வைக்கவில்லை.
வட கொரியாவின் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, கடந்த மாதம் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்