You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா - ஜிம்பாப்வே இடையேயான உறவு எவ்வளவு ஆழமானது?
ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், முன்னதாக அந்நாட்டின் ராணுவத் தலைவர் பீஜிங்கிற்கு வருகை தந்தது "சாதாரண ராணுவ நிகழ்வுதான்" என சீனாவின் வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உண்மையில் சீனாவிற்கும் ஜிம்பாப்வேவிற்குமான உறவு எவ்வளவு ஆழமானது?
ஜிம்பாப்வே நாட்டை ராணுவம் கைப்பற்றுவதற்கு சிறிது நாட்களுக்கு முன், அந்நாட்டின் ஜெனரல் கான்ஸ்டன்டினோ சீவெங்கா சீனப் பயணம் மேற்கொண்ட செய்தி அனைவராலும் கவனிக்கப்பட்டது.
ஜிம்பாப்வேயில் நடப்பதை கூர்ந்து கவனித்து வருவதாக கூறிய சீனா, அதிபர் முகாபேவின் நீக்கத்தை கண்டனம் செய்யவில்லை.
ஜிம்பாப்வே நாட்டின் விவசாயம் முதல் கட்டுமானம் வரை பில்லியன் கணக்கான பவுண்டுகள் வரை முதலீடு செய்துள்ளது சீனா.
உண்மையில், ஜிம்பாப்வே சீனாவின் சார்புடைய பங்குதாரர் - ஏற்றுமதியின் மிகப் பெரிய சந்தையாகவும் மற்றும் ஜிம்பாப்வேவின் பலவீனமான பொருளாதாரத்திற்கு சீனாவின் ஆதரவு தேவைப்படுகிறது.
ரோடேசியன் புஷ் போரிலிருந்து சீனாவுடனான ஜிம்பாப்வேயின் உறவு ஆழமானதாக இருந்து வருகிறது.
1979 ஆம் ஆண்டு சோவியட்டின் ஆதரவை பெற ராபர்ட் முகாபே தோல்வியடைந்ததையடுத்து சீனாவை அனுகிய போது, ஜிம்பாப்வேவின் கொரில்லா போராளிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கியது சீனா.
1980 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் முறையாக தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. அடுத்த ஆண்டே பிரதமரான ராபர்ட் முகாபே சீனத் தலைநகரமான பீஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டார்.
அதிலிருந்து சீனாவுக்கு அவர் வருகை தருவது வழக்கமான ஒன்றானது.
ஜிம்பாப்வேவின் 'கிழக்கே பார்' (Look East Era) என்ற காலகட்டத்தில் சீனாவின் ராணுவ ஈடுபாடு மேலும் ஆழமாக்கியது.
Hongdu JL-8 ஜெட் விமானம், JF -17 தண்டர் போர் விமானம், ரேடார் மற்றும் ஆயுதங்களை சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்தது ஜிம்பாப்வே.
எனினும், 2008 ஆம் ஆண்டு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்தது சர்ச்சைக்குள்ளாக, ஜிம்பாப்வேவை 'வரம்புக்குட்பட்ட' ராணுவ வர்த்தகத்திற்கான பட்டியலில் வைக்க சீனா முடிவு செய்தது.
ஹராரேவின் புறநகர் பகுதிகளில் இரண்டு மிக பெரிய தூதரங்கள் உள்ளன. ஒன்று இங்கிலாந்து, மற்றொன்று சீனத் தூதரகம்.
மற்ற சில தூதரங்கள் குறைக்கப்பட்டு அல்லது மூடப்பட்ட நிலையில், சீன தூதரகம் விரிவாக்கப்பட்டது.
வணிகம், சிவில் சமூகம் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களோடு இங்கிலாந்து தொடர்பிலிருக்க, சானு பி.எஃப் கட்சி, மாநில பாதுகாப்பு உட்பட்டவைகளின் தொழில்நுட்ப உதவியில் முதலீடு செய்தது சீனா.
சானு பி.எஃப் கட்சியின் அரசியல் மற்றும் உட்கட்சி விவகாரங்களில் சீன தூதர்கள் நல்ல தொடர்பிலிருக்க, மேற்கத்திய தூதர்கள் உறுதிப்பாடு, சிறந்த முதலீட்டுக்கான சூழல் மற்றும் ஆட்சி ஒத்துழைப்பு குறித்து ஆவலாக இருந்தனர்.
2015 ஆம் ஆண்டு அதிபர் ஷி ஜின்பிங் ஜிம்பாப்வே செல்ல ஜனவரி 2017 ஆம் ஆண்டு அதிபர் முகாபே பீஜிங் சென்றிருந்தார்.
ஜிம்பாப்வேயில் முதலீடு செய்வதற்கு திறமையான நிறுவனங்களை ஊக்குவிக்க தனது நாடு தயாராக உள்ளதென சீன தலைவர் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.
ஆனால், தனிப்பட்ட முறையில், ஜிம்பாப்வே தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொள்ளும் வரை எந்த கடனும் கொடுக்கப்படாது என்ற செய்தி அனுப்பப்பட்டது.
சீன தூதர்கள் மற்றும் வணிகங்கள், ஜிம்பாப்வேயின் சிறந்த நாட்களுக்காக காத்திருக்கின்றன.
ஜிம்பாப்வே நாட்டின் புகையிலையை மிகப் பெரியளவில் வாங்குவது சீனா. ஆனால், தற்போது முதலீட்டுக்கான சூழல் சவாலாக உள்ள காரணத்தினால் சீன நிறுவனங்கள் மாற்று சந்தைகளை தேடுகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன் சீனாவில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க உறவுகள் குறித்த சந்திப்பில், ஒருமுறை கூட ஜிம்பாப்வே குறிப்பிடப்படவில்லை.
திறம் வாய்ந்த பங்குதாரர்களான எதியோப்பியா, சுடான் அல்லது அங்கோலா அல்லது பெரிய சந்தைகளான நைஜீரியா, கென்யா மற்றும் தென் ஆப்பிரிக்காவை போல அல்லாமல் பீஜிங்கின் புதிய முன்னுரிமைகளில் ஜிம்பாப்வே இடம்பெறவில்லை.
எனவே, பீஜிங்கின் நலன் ஜிம்பாப்வேயின் சிறந்த முதலீட்டு சூழலில் உள்ளது.
ஜிம்பாப்வே நாட்டின் தற்போதைய தேவை நிலையான மற்றும் பொருப்புள்ள அரசாங்கம் - அப்போது தான் ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவின் முதலீட்டாளர்கள் வருங்காலத்தில் இந்நாட்டில் முதலீடு செய்வதை குறித்து தீவிரமாக கருதும் நிலை உண்டாகும்.
இதுவே கடந்த ஜனவரி மாதம் பீஜிங்கில் முகாபே பெற்ற செய்தி. அது மட்டுமில்லாமல் கடந்த வாரம் ஜிம்பாப்வேயின் ராணுவ தலைவருக்கும் இதே செய்திதான் கொடுக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்