You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேட்டையாடிய யானை உறுப்புகளை இறக்குமதி செய்யும் விவகாரம்: பின்வாங்கினார் டிரம்ப்
ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் வேட்டையாடிய யானையின் உடல் பாகங்களை அமெரிக்கா இறக்குமதி செய்வதற்கு ஒபாமா காலத்தில் விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்.
ஒரு நாள் முன்னதாகத்தான் அத்தடையை அகற்றுவதாக அறிவித்தது டிரம்ப் நிர்வாகம். இந்த நடவடிக்கை விலங்கு நல ஆர்வலர்களின் பலத்த விமர்சனத்துக்கு ஆளானது.
இந்நிலையில் வேட்டையாடிய யானையின் உடல் பாகங்களை இறக்குமதி செய்வதை அனுமதிக்கும் முடிவை நிறுத்திவைப்பதாக டிரம்ப் வெள்ளிக்கிழமை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் இருக்கும், விலங்குகள் பாதுகாப்பு நிலை தொடர்பான தகவல்களை மறுபரிசீலனை செய்யும் வரையில் உடல்பாக இறக்குமதி தொடர்பான முடிவை நிறுத்திவைப்பதாக" அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமா காலத் தடை உத்தரவை தளர்த்துவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்ததும் சமூக வலைதளங்களில் இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
"நீங்கள் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்று உலாவரும் புரளிகள் உண்மை என நிரூபிக்கின்றன, உமது வெட்கக் கேடான செயல்கள்" என்று டிரம்புக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் பிரெஞ்ச் நடிகை பிரிட்ஜெட் பார்டாட்.
ஆப்பிரிக்காவில் வேட்டைக்குச் சென்றபோது இறந்த விலங்குகளோடு டிரம்பின் மகன்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பலர் பகிர்ந்துகொண்டனர்; யானையின் துண்டான வாலுடன் டிரம்பின் மகன் காட்சியளிக்கும் படம் அவற்றில் ஒன்று.
சமூக வலைத்தளங்களில் இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் பரவியது.
வேட்டையாடுவதற்கு செலுத்தப்படும் கட்டணம் அழியும் நிலையில் உள்ள விலங்குகளைக் காக்க உதவும் என்று அமெரிக்க மீன் மற்றும் காட்டுயிர் பணிகள் அமைப்பு வாதிட்டது.
2007 முதல் 2014 வரையிலான காலத்தில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்திருப்பதாக யானைகள் கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜிம்பாப்வேயில் மட்டுமே 6 சதவீத யானைகள் குறைந்திருப்பதாக தொண்டு நிறுவனம் ஒன்று கண்டறிந்தது.
அமெரிக்காவின் அழியும் நிலையில் உள்ள விலங்குகள் சட்டத்தின் கீழ் யானைகள் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், செலுத்தப்படும் கட்டணம் அழியும் நிலையில் உள்ள உயிர்களின் பாதுகாப்புக்கு உதவும் என்பதற்கு ஆதாரம் இருக்குமானால், விலங்குகளின் உறுப்புகளை இறக்குமதி செய்ய அமெரிக்காவின் சட்டம் அனுமதி அளிக்கிறது.
ஜிம்பாப்வேயின் ஹ்வாங்கே தேசிய பூங்காவில் இருந்த சிசில் என்று பெயரிடப்பட்ட பிரபல சிங்கம் ஒன்றை 2015ம் ஆண்டு அமெரிக்கப் பல் மருத்துவர் ஒருவர் கொன்றார். இந்த சிங்கத்தின் மரணம் அமெரிக்காவிலும், ஜிம்பாப்வேயிலும் கொந்தளிப்பை உருவாக்கி, பல் மருத்துவர் கொஞ்ச நாள் ஒளிந்து வாழவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்