You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதியில் இருந்து பிரான்சுக்கு பறந்த லெபனானின் முன்னாள் பிரதமர்: அடுத்த திட்டம் என்ன?
லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் ஹரிரி செளதி அரேபியாவில் இருந்து பிரான்ஸ் சென்றுள்ளதாக அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் ஒரு தொலைக்காட்சி கூறியுள்ளது.
தான் செளதியில் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதை முன்பு ஹரிரி மறுத்திருந்தார். 'இது பொய்' என அவர் டிவிட் செய்திருந்தார்.
நவம்பர் 4-ம் தேதி தனது ரியாத் பயணத்தின் போது திடீரென ஹரிரி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமா ஏற்றிக்கொள்ளப்படவில்லை.
''ரியாத் விமான நிலையத்தில் இருந்து, தனது தனி விமானத்தில் மனைவியுடன் கிளம்பிய சாத் ஹரிரி, பாரிஸ் அருகில் உள்ள லே போர்கேட் விமான நிலையத்திற்குச் செல்கிறார்.'' என சனிக்கிழமையன்று பியூச்சர் தொலைக்காட்சி கூறியது.
பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங்கை சாத் ஹரிரி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, லெபனான் திரும்புவதற்கு முன்பு மற்ற அரபு நாடுகளின் தலைநகருக்கு பயணம் செய்கிறார்.
சாத் ஹரிரி மற்றும் அவரது குடும்பத்தை பாரிஸுக்கு அழைத்துள்ளதாகப் புதன்கிழமையன்று பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் கூறியிருந்தார். சௌதி இளவரசர் சல்மானுடன் தொலைப்பேசியில் பேசிய பிறகு மக்ரோங் இதனைக் கூறியிருந்தார்.
சாத் ஹரிரிக்கு தான் அரசியல் அடைக்கலம் தரவில்லை என மக்ரோங் பின்பு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஹரிரி சில நாட்கள் தங்கியிருப்பார் என எதிர்பார்ப்பதாக கூறியிந்தார்.
லெபனான் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரான்ஸ், இந்த நெருக்கடியில் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்து வருகிறது.
ஹரிரியின் பிரான்ஸ் பயணம் அசாதாரண அரசியல் சிக்கலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். இந்த அரசியல் சிக்கல் தீவிர ஊகங்களுக்கும், கண்டனங்களும் வழிவகுத்துவருகிறது என பிபிசியின் லீஸ் டவுசெட் கூறியுள்ளார்.
ஹரிரியை செளதி கைதுசெய்து வைத்திருந்ததாக லெபனான் அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். ஆனால், செளதி இதனை மறுத்துள்ளது.
லெபனானை கைப்பற்றுவதாகவும், இப்பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்குவதாவும் இரானையும், இரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பையும் ஹரிரி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்து முயற்சசியாக, சாத் ஹரிரியை பதவி விலக செளதி கட்டாயப்படுத்தியாக கூறப்படுவதை செளதி அரேபியா மறுத்துள்ளது.
இதற்கிடையே, ஹரிரியின் விருப்பத்திற்கு மாறாக அவர் வைக்கப்பட்டிருப்பதாக ஜெர்மனியின் வெளியுறத்துறை அமைச்சர் சிக்மார் கேப்ரியல் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது ஜெர்மன் தூதரை செளதி திரும்ப அழைத்துள்ளது.
லெபனான் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனான செய்தியாளர் சந்திப்பின் போது, சிக்மார் கேப்ரியல் இக்கருத்தைக் கூறியிருந்தார்,
'' செளதி அரேபிய தனது ஜெர்மன் தூதரை திரும்ப அழைக்க உள்ளது. மேலும் ஜெர்மன் வெளியுறத்துறை அமைச்சரின் துரதிருஷ்டவசமான மற்றும் நியாயமற்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செளதியில் உள்ள ஜெர்மன் தூதருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது'' என செளதியின் அரசு செய்தி நிறுவனமான எஸ்பிஏ கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்