You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நியூ யார்க் தாக்குதல் : பாதுகாப்பை பலப்படுத்த டிரம்ப் உறுதி
நியூ யார்க் டிரக் தாக்குதலுக்கு பிறகு, உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மான்ஹாட்டன் பகுதியில், சைக்கிள்கள் செல்லும் பாதையில், டிரக் ஓட்டுநர், சைக்கிளில் சென்றவர்கள் மீது ஏற்றியதில், குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் குடியேறியவரான சய்ஃபுல்லோ சாய்போவ், வெள்ளை நிற டிரக்கில் இருந்து இறங்கிய போது, காவல்துறையால் சுட்டு கைது செய்யப்பட்டார்.
அவரது வாகனத்தில் இஸ்லாமிய அரசு என தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவை குறிப்பிடும் வகையிலான விவரங்கள் இருந்ததாக, சட்ட அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறினார் என்று சி.பி.எஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
சுடப்பட்ட அந்த ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய நியூ யார்க் மேயர், பில் டிபிளாசியோ, `அப்பாவி மக்களை குறிவைத்த, கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல் இது` என்றார்.
`எங்கள் மன வலிமையை உடைப்பதற்கான செயல்தான் இது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், நியூ யார்க் மக்கள் மிகவும் வலிமையானவர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். எந்த ஒரு வன்முறை செயலும், எங்களை அடக்க முயலும் செயலும், எங்களின் மன வலிமையை உடைக்காது` என்றார்.
நியூ யார்க் காவல்துறை ஆணையர் ஜேம்ஸ் ஓநீல், காயமடைந்த நபர் குறித்து கூறுகையில், `மோசமாக காயமடைந்துள்ளார், ஆனால், உயிருக்கு ஆபத்தில்லை` என்றார்.
அவர் தகவல் கிடைத்த சூழலின் அடிப்படையில் நடந்தவற்றை விளக்கினார்.
தாக்குதல் நடந்தது எப்படி?
- உள்ளூர் நேரப்படி மதியம் 3மணி அளவில், வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு டிரக், பாதசாரிகளையும், சைக்கிள் பயணிகளையும் இடித்தவாறு, பல கட்டடங்களை தாண்டி சென்றது.
- பிறகு ஒரு பள்ளிக்கூட பேருந்தை இடித்த அந்த டிரக், இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்திய பிறகு நின்றது.
- சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த காவல்துறை அதிகாரியால் டிரக்கை ஒட்டிச் சென்றவர் வயிற்றுக்கு மேல் சுடப்பட்டார்.
- சம்பவ இடத்தில் இருந்து ஒரு பெல்லட் துப்பாக்கியும், ஒரு பெயிண்ட் பால் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களும், காயமடைந்தவர்களும் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொண்டிருந்தனர்.. வேலையில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் வீடு திரும்புவோர், மாலை வேளையில் சைக்கிள் ஓட்டுவோர் இருந்தனர் என்று ஆணையர் தெரிவித்தார்.
`இன்றைய நாள், நியூ யார்க்கில் உள்ள பல மக்கள், பல குடும்பங்களுக்கு மிகப்பெரிய வருத்தமான நாளாகும்` என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகிக்கப்படும் நபர் வாகனத்தில் இருந்து இறங்கும் போது, `அல்லாஹூ அக்பர்` (கடவுள் உயர்ந்தவர்) என்று கத்தியுள்ளார்.
இது குறித்து அதிபருக்கு விளக்கப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்பின் இருவேறு டுவிட்டர் பதிவுகளில்:
- `நியூ யார்க்கில், நடந்தது மிகவும் தெளிவற்ற, நோய்வாய்ப்பட்ட ஒருவரின் செயல்போல தெரிகிறது. சட்ட அமலாக்கத்துறை சூழலை மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறது. அமெரிக்காவில் இது முடியாது!`
- `மத்திய கிழக்கு பகுதிகளிலும், பிற இடங்களிலும், தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீண்டும் வரவோ, நம் நாட்டினுள் நுழையவோ நாம் அனுமதிக்க கூடாது. என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்