You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷிய அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் தொலைக்காட்சித் தொகுப்பாளர் சோப்சாக்
2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர் க்சேனியா சோப்சாக் (35).
பிரபலமான எதிர்க்கட்சித் தலைவர் அல்க்சி நவல்னி முறைகேடு வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றுள்ளதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தம் மீதான குற்றச்சாட்டு பொய்யாகத் தொடுக்கப்பட்டது என்று விமர்சிக்கிறார் நவல்னி.
அந்த தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனினும், அனுமதியில்லாத போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததற்காக தற்போது 20 நாள் சிறைத்தண்டனை ஒன்றையும் அவர் அனுபவித்து வருகிறார்.
சோப்சாக் போட்டியிடுவதை வரவேற்றுள்ள அதிபரின் கிரம்ளின் மாளிகை, அது அரசமைப்புச் சட்டப்படியான நடவடிக்கை என்று கூறியுள்ளது.
அதே நேரம், சோப்சாக் போட்டியிடுவது எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்திவிடும் என்ற கருத்தும் சில விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.
"தாம் நவல்னியை ஆதரிப்பதாகவும், அவர் போட்டியிடுவதற்கு உள்ள தடை நீங்கினால் தாம் போட்டியில் இருந்து விலகிவிடுவதாகவும் சோப்சாக் கூறியுள்ளார்.
ஆனால், சோப்சாக் ஆளும் கட்சியின் கையாள் என்றும், முறைகேடாக நடத்தப்படும் இத் தேர்தலுக்கு ஒரு நியாயமான தோற்றத்தை அளிப்பதற்காக போட்டியில் இறக்கப்பட்டவர் என்றும் நவல்னி விமர்சனம் செய்துள்ளார்.
அதே நேரம் அதிபர் விளாதிமிர் புதினின் நீண்ட கால குடும்ப நண்பரான சோப்சாக் புதினை எப்படி விமர்சித்துப் பேசுவார் என்று பார்ப்பது முக்கியமானது," என்கிறார் பிபிசியின் மாஸ்கோ செய்தியாளர் சாரா ரெயின்ஸ்ஃபோர்டு.
நவல்னி தேர்தலில் நிற்பதற்கான தடை நீக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளார் சோப்சாக்.
ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. டிசம்பரில் அரசியல் கட்சிகள் தங்கள் மாநாடுகளை நடத்தி தேர்தலுக்கான தங்கள் வேட்பாளரை அறிவிப்பார்கள். கட்சி சாராத வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவுக்கு ஆதரவாக 3 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றால் அவர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடலாம்.
மீண்டும் போட்டியிடப் போகிறாரா என்று அதிபர் புதின் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
- வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங்
- 8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர டிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி
- தங்கம் உருவானது எப்படி? நியூட்ரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம்
- வட கொரியா பற்றி நாடகம்: தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்
- ஷி ஜின்பிங் ஐந்தாண்டு ஆட்சி: சீனா பெற்றதும் இழந்ததும் 5 அட்டவணையில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்