You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்!
கடும் போட்டிகளை கொண்ட திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான "விண்டோஸ் 10 செல்பேசிகளை" மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட தொடர் சிறப்பம்சங்களையும், மென்பொருள் மேம்பாடுகளையும் பெற்று வரும் சூழலில், இதை எதிர்பார்த்து காத்திருந்த விண்டோஸ் செல்பேசி பயனாளர்களுக்கு இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த ஓராண்டாகவே விண்டோஸ் ஃபோன் பற்றி குறிப்பிடத்தக்க வகையில் எவ்வித மேம்பாட்டையும் அறிவிக்காத மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது நிலைப்பாட்டை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் அமைதி காத்து வந்தது.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள் பிரிவின் துணைத்தலைவரான ஜோ பெல்ஃபியோர், ட்விட்டர் பயனாளி ஒருவரின் விண்டோஸ் போனின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "நிச்சயமாக நாங்கள் இந்த தளத்தை ஆதரிப்போம்... பிழை திருத்தங்கள், பாதுகாப்பு மேம்படுத்தல்கள், முதலியனவற்றை தொடர்ந்து அளிப்போம். ஆனால் புதிய அம்சங்களை உருவாக்குவதிலும்/ ஹார்டுவேர் என்னும் வன்பொருள் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தப்போவதில்லை." என்று பதிவிட்டுள்ளார்.
அவர் தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், "நாங்கள் டெவெலபேர்களுக்கு ஊக்கமளித்து மிகவும் கடினமாக உழைத்தோம் (சிறந்த செயலிகளை உருவாக்க), பணமும் அளித்தோம்.. அவர்களுக்காக செயலிகளை உருவாக்கினோம்..ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் முதலீடு செய்யும் அளவுக்கும் குறைவாக அச்செயலிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது." என்று விண்டோஸ் போனை மேம்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும், தோல்விக்காக காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், சென்ற மாதம் தான் விண்டோஸ் போனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறிவிட்டதாக தெரிவித்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களும் விரைவில் ஆண்ட்ராய்டு அல்லது iOS போன்ற வேறு இயங்குதளங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 மொபைல், வாடிக்கையாளர்களின் கணினி மற்றும் செல்பேசிகளில் ஒரே மாதிரியான செயலிகளை பயன்படுத்தும் வகையில் வசதிகளை அளித்து அவர்களை ஈர்க்க முயன்றது. ஆனால், அந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
விண்டோஸின் இந்த முடிவு கடந்த சில காலமாகவே பேசப்பட்டு வந்ததாக மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
"இந்த விண்டோஸ் 10 மொபைலை அதிக அளவிலான கருவிகளில் பயன்படுத்துவதில்லை. அதனால், இது சில்லறை வணிகர்களுக்கோ அல்லது மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கோ லாபகரமானதாக இல்லை" என்று ஐடிசி நிறுவனத்தின் ஃபிரான்சிஸ்கோ ஜெரோனிமோ தெரிவித்துள்ளார்.
"மேலும், வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை, இது ஆண்ட்ராய்டு அல்லது iOS தளங்களைப் போல இது நடைமுறை ரீதியாக சிறப்பான அனுபவத்தைக் கொடுப்பதில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்