You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபேஸ்புக் மீதான டிரம்பின் குற்றச்சாட்டு: மறுக்கும் மார்க் சக்கர்பர்க்
ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் எப்போதுமே தமக்கு எதிராகவே இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் குற்றம்சாட்டியதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
"ஃபேஸ்புக் எப்போதுமே டிரம்புக்கு எதிராகத்தான் இருந்துவந்தது. ஊடகங்கள் எப்போதுமே டிரம்புக்கு எதிரானவைதான். அதனால்தான் பொய்ச் செய்திகள் வெளியாயின. நியூயார்க் டைம்சும், வாஷிங்டன் போஸ்டும் கூட டிரம்புக்கு எதிரானதாக இருந்தவையே. இவை என்ன கூட்டுச்சதியா?"என்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
ஆனால், ஃபேஸ்புக் தனக்கு எதிராக செயல்படுவதாக டிரம்ப் கூறியுள்ள கருத்தை, அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் குறுக்கீடு உள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்கும் காங்கிரஸ் விசாரணைக் குழுவிடம் தமது 3,000 அரசியல் விளம்பரங்களை பேஸ்புக் நிறுவனம் விரைவில் அளிக்கவுள்ளது.
2016-ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோதும் , அதற்கு பின்பும், ஃபேஸ்புக்கின் விளபரங்களை, ரஷ்ய நிறுவனங்கள் வாங்கியிருக்கலாம் என ஃபேஸ்புக் நம்புகிறது.
ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக கூறப்படும் குற்றசாட்டுகளுக்காக, நவம்பர் 1-ஆம் தேதி, ஃபேஸ்புக், கூகுள் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள், அமெரிக்காவின் புலனாய்வுக் குழு முன்பு சாட்சியம் அளிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
தங்களுக்கான அழைப்பு கடிதம் வந்துள்ளது என உறுதிசெய்துள்ள,ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள், குறிப்பிட்ட நாளில், ஆஜராவது குறித்து இன்னும் எதுவும் கூறவில்லை.
அதிபர் டிரம்ப்பின் கருத்திற்கு, ஒரு ஃபேஸ்புக் பதிவில் பதிலளித்துள்ள மார்க் சக்கர்பர்க், எல்லா விதமான சிந்தனைகளுக்குமான களமாக ஃபேஸ்புக்கை உருவாக்கக் கடுமையாக முயற்சித்து வருவதாகக் கூறியுள்ளார்.
அந்த "பிரச்சனைக்குரிய விளம்பரங்களைத்" தவிர்த்து, ஃபேஸ்புக் ,"மக்களுக்கு ஒரு குரலை அளித்துள்ளது, வேட்பாளர்கள் மக்களிடம் நேரடியாக கலந்துரையாட வழிவகை செய்துள்ளது, லட்சக்கணக்கானோர் வாக்களிக்க உதவியுள்ளது".
தங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் குறித்து, அமெரிக்க அரசியலின் இரு தரப்பினருமே வருத்தத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தாராளவாத சிந்தனை உடையவர்கள் டிரம்பின் வெற்றியைத் தான் சாத்தியப்படுத்தியதாக தன் மீது குற்றம் சுமத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இணையதள விளம்பரங்களுக்காக பல கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டதாகக் கூறியுள்ள மார்க், தங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்படும் பிற விளம்பரங்களைவிடவும் அந்த அரசியல் விளம்பரங்கள் ஆயிரம் மடங்கு பிரச்னைக்குரியதாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
எல்லோருக்குமான சமூகத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளை ஃபேஸ்புக் தொடரும் என்று கூறியுள்ள அவர், தவறான செய்திகளை பரப்ப முயலும் மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்ற முயலும் அரசுகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை டிரம்ப்க்கு சாதகமாக மாற்ற ரஷ்யா முயற்சி செய்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மற்றும் எஃப்.பி.ஐ ஆகியவை இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
பிற செய்திகள்
- பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்திய ஜெனரல்
- சுதந்திர குர்திஸ்தான்: கருத்து வாக்கெடுப்பில் அமோக ஆதரவு
- 'கேரட்' என நினைத்து காரை கடித்த கழுதை: உரிமையாளருக்கு அபராதம்?
- காபூல்: அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் பலர் உயிரிழப்பு?
- சித்திரவதையால் உயிரிழந்த மகன்: பெற்றோரின் நெஞ்சை உலுக்கும் பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :