You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலக அளவில் கடற்படையை விரிவாக்க முயற்சி செய்யும் சீனா
ஜப்பான் மற்றும் ஒக்கோட்ஸ்க் கடல் நீரில் ரஷ்யாவுடன் சீனா நடத்திக்கொண்டிருக்கும் கூட்டு கடற்படை பயிற்சிகளானது, ஆசியாவின் மிகப்பெரிய நாடு எப்படி தனது கடற்படையின் திறன்களை வேகமாக விரிவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சமீபத்திய உதாரணம்.
ஒருகாலத்தில் சீன நாட்டின் கடலோர பகுதிகளின் அருகில் வரையறை செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தனது நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டிருந்த மக்கள் விடுதலை கடற்படை ராணுவமான 'பிளான்' தற்போது தொடர்ச்சியாக தனது செயல்பாடுகளை விரிவாக்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல், ஐரோப்பிய கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட கூட்டுப்பயிற்சியில் சேர்ந்தது.
இப்போதைய "கூட்டு கடல் 2017" கடற்படை பயிற்சிகளுக்கு முந்தையச் சுற்று ஜூலை மாதம் நடந்தது. அப்போதுதான் சீனப் போர்க்கப்பல்கள் முதல்முறையாக பால்டிக் கடலில் நுழைந்தன. சீனா தனது போர்கப்பல்களின் உற்பத்தியை பெருக்கி அயல்நாட்டில் முதல் அடித்தளத்தை போட்டபிறகு உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய அதிஉயர்ந்த பயணங்களுக்கு அவற்றை அனுப்பியது.
கடல் தடம் விரிவாக்கம்
சீனவின் கடற்படை விரிவாக்கமானது ஆழ்கடல் முழுவதும் உட்பட உலகளாவிய கடற்பரப்பில் இயங்குமாறு ஒரு கடற்படையை கட்டமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 2015ல் வெளியான பாதுகாப்பு அமைச்சகத்தின் வெள்ளை அறிக்கையில் சீனாவின் யுக்திகளில் கடற்படையின் மிகப்பெரிய பங்கு குறித்து வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரிய தீபகற்பம், மத்திய தரைக் கடல், பால்டிக் கடல், பாரசீக வளைகுடா, மேற்கு பசிபிக் உள்ளிட்ட சில இடங்களுக்கு போர்கப்பல்களை அனுப்பி வைத்தது சீனா.
மக்கள் விடுதலை ராணுவமானது, கடந்த சில வருடங்களில் நிலத்திலும் நீரிலும் 30க்கும் மேற்பட்ட ஆண்டு கூட்டுப் பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளது என அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதை சீன அதிகாரிகள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
உண்மையான போர் சூழ்நிலைகளில் நடைமுறை பயிற்சி எடுக்க அனுமதிக்கும்போது, அந்தப் பயிற்சிகளின் நோக்கம் சீனாவின் உலகளாவிய சண்டை வலிமை குறித்து செய்து காட்டி நிரூபிப்பதே என்கிறது ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை.
சமீபத்தில் இந்தியாவுடனான எல்லை பிரச்னை ஏற்பட்டபோது இந்தியப் பெருங்கடலில் ஒரு அரிய ஆயுதம் தாங்கிய நேரடி ராணுவ பயிற்சியை நடத்தியது. அது பெய்ஜிங்கின் வலுவான கடற்படை வலிமை குறித்து நியூ டெல்லிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனப் பலர் தெரிவித்தனர்.
அதே போல கடந்த ஜூன் மாதம் ஈரானுடன் சீனா கூட்டுப்பயிற்சி நடத்தியபோது ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் ஓரியண்டல் டெய்லி என்ற பத்திரிகையில் பாரசீக வளைகுடாவில் சீன கடற்படை ரோந்து நடவடிக்கைகளில் நடத்துவது வழக்கமான நிகழ்வாக மாறும் என ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடற்படை விரிவாக்கத்தின் விளைவாக இதுவரை அலாஸ்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றிற்கு அப்பால் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் காணப்பட்டிருக்கின்றன என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் சீனா தனது முதல் வெளிநாட்டு கடற்படை தளத்தை ஜிபூட்டியில் செயற்படுத்தியது. அது வெளிநாட்டில் அதன் இராணுவ நிலைப்பாட்டை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.
கூடுதலாக பாகிஸ்தான் மற்றும் மேற்கு ஆப்ரிக்க பகுதிகளிலும் சீனா தனது தளங்களை கட்டமைக்கலாம் என ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார் சீனாவின் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பின் மூத்த ஆலோசகரும் , முன்னாள் கடற்படை அதிகாரியுமான சூ குவாங்கியூ.
கடற்படை நவீனமாக்கம்
அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் கடற்படையை நவீனமாக்கும் திட்டத்தை முடுக்கிவிட்டிருக்கிறது சீனா. இந்த திட்டத்தில் மேம்பட்ட போர்க்கப்பல்கள், விமான கேரியர், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை உருவாக்குகிறது.
2017 ஆம் ஆண்டின் சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 152 பில்லியன் டாலர் நிதியில் பெரும்பாலானவை கடற்படையின் 15 சதவிகித விரிவாக்கத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது.
உள்நாட்டு தயாரிப்பில் உருவான முதல் விமான கேரியரை மிகப் பிரபலமாக அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜுனில் நவீன போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது. இவை சர்வதேச இராணுவ சக்தியாக சீனா உருவெடுப்பதை சுட்டிக்காட்டுகின்றன என குறிப்பிட்டன உள்ளூர் ஊடகங்கள்.
மேலும், ஒரே நேரத்தில் பல கடற்பகுதி களங்களில் இயங்கும் திறன் கொண்ட "நீல நீர் கடற்படை" உருவாக்க சீனாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்றாவது கேரியர் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தனது பிராந்தியங்களை பாதுகாக்கவும் அயல்நாட்டு விருப்பங்களுக்கும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் இரண்டும் இந்திய பெருங்கடலில் இரண்டு விமான கேரியர்களும் தேவை. எனவே குறைந்த பட்சம் ஐந்து முதல் ஆறு விமான கேரியர்கள் தேவை என்கிறார் பிஎல்ஏ கடற்படை உபகரண ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் யின் ஜுஹோ.
ஒரு சமீபத்திய அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை சீனாவின் "கட்டுப்படுத்தப்பட்ட ஆனால் வளர்ந்து வரும்" கடற்படை திறனை உயர்த்தி காட்டுகிறது.
சர்வதேச கவலை
சீனா தன் கடற்படை விரிவாக்கத்தை இயற்கையான தற்காப்பு நடவடிக்கை என்று சித்தரிக்கிறது, ஆனால் பலர் அது உயர் கடல்களில் பெய்ஜிங்கின் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பகுதியாக பார்க்கின்றனர்.
சீனா உலகம் முழுவதும் கடல்களில் தனது இருப்பை மேம்படுத்துகிறது. அவை சீனாவின் நம்பிக்கையும் வலிமையையும் பிரதிபலிக்கும்." என்று ஒரு சீன அறிஞர் குய் ஹெங் கூறுகிறார்.
பெய்ஜிங்கோடு பதட்டமான உறவைப் பகிர்ந்து கொள்ளும் மூன்று நாடுகளான ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சீனாவின் இராணுவ கட்டமைப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்கள் கடற்படை சொத்துக்களை அதிகரிக்க பெரும் வளங்களை அர்ப்பணித்துள்ளது.
தனது வளரும் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், பெல்ட் மற்றும் சாலை திட்டத்திற்கும் ஒரு வலுவான கடற்படை தேவை என்று சீனா கூறுகிறது. சீனா மற்றும் ரஷ்யாவின் கூட்டு கடற்படை பயிற்சிகளை கண்டு மேற்குலகில் உள்ள சூடான தலைகள் அமைதியாக இருக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறுகிறது ஒரு சின்குவா கட்டுரை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்