ஆஸ்பிரின் மாத்திரை பல் சொத்தையை குணமாக்கலாம் - விஞ்ஞானிகள்

பற்கள்

பல் சொத்தையின் பாதிப்புக்களை ஆஸ்பிரின் மாத்திரை மாற்ற முடியும் என்றும், அந்த பல்லின் சொத்தையை சரிசெய்யும் சிகிச்சையான "நிரப்புதலை" நம்முடைய பல்லாலேயே செய்துவிட முடியும் என்றும் வட அயர்லாந்தின் தலைநகரும், முக்கிய துறைமுகமுமான பெல்ஃபாஸ்டிலுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல் சொத்தை பகுதியில் குணமாக்குதலை மேம்படுத்தி, பல்லிலுள்ள குருத்தணுக்களை (ஸ்டெம் செல்) தூண்டுவதாக குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொடக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பல்லில் வரக்கூடிய பொதுவான நோயான பல் சொத்தை, பல் நாளங்களில் வீக்கம் ஏற்பட செய்து பல் வலியை உருவாக்குகிறது.

வட அயர்லாந்தில் 15 வயது வரையானோரில் 72 விழுக்காட்டினர் பல் சிதைவு பெற்றிருப்பதாக பிரிட்டிஷ் பல் கூட்டமைப்பு 2016 ஆம் ஆண்டு தெரிவித்தது.

இதுவே, இங்கிலாந்தில் 44 சதவீதமாகவும், வேல்ஸில் 63 சதவீதமாகவும் உள்ளது.

வலி நிவாரணியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரை தான் ஆஸ்பிரின் (அசிட்டிலசிலிசிசிலிக் அமிலம்). வீக்கத்தை தடுக்கின்ற மருத்துவ குணம் இதிலுள்ளது. தலை வலி, மாதவிடாய் வலி, தசை வலி போன்றவைகளில் இருந்து விடுபடுவதற்கு இது பயன்படுத்தப் படுகிறது. ஒரு ஆஸ்பிரின் மாத்திரையின் விலை ஒரு பென்னிதான்.

பல் சொத்தை

பட மூலாதாரம், Getty Images

பற்கள் இயற்கையாகவே குணமாகுவதற்கு மிகவும் குறைவான திறன்களையே கொண்டுள்ளது. உள் பல்கூழ் வெளியே தெரிந்தால், இனாமலுக்கு கீழே மெல்லிய உட்பல்லுறை அடுக்கை அவற்றால் உருவாக்க முடியும். ஆனால், இதனால் பெரிய பல் பிரச்சனைகளை தடுக்க இயலாது.

பல் சிதைவுக்கு அதனை நிரப்பிவிடுவதுதான் தற்போதைய சிகிச்சையாக உள்ளது. இந்த பல்லின் வாழ்நாளில் பலமுறை இதனை மாற்றிவிட்டு, மீண்டும் நிரப்ப வேண்டிய நிலையுள்ளது.

பேராசிரியை இக்ளஸ் எல் கரீம், குயின்ஸ் பல்கலைக்கழக பெல்ஃபாஸ்ட்டிலுள்ள மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் உயிர் மருத்துவ அறிவியல் கல்லூரியில் மூத்த விரிவுரையாளராக உள்ளார்.

பற்களில் காணப்படும் பல் குருத்தணுக்களை மையப்படுத்தியும், சேதமடைந்த பற்களில் நிரப்புதல் சிகிச்சையை மாற்றிவிட்டு, பற்களே அதனுடைய மீண்டும் குணம்பெறுகின்ற, சரிப்படுத்தும் திறன்களை பல்மருத்துவர் எவ்வாறு மேம்படுத்தியும் அவருடைய ஆய்வு அமைந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற பிரிட்டிஷ் வாய் மற்றும் பற்கள் ஆய்வு ஆண்டு மாநாட்டில், இந்த ஆய்வு முடிவுகள் சமர்பிக்கப்பட்டன.

ஆஸ்பிரின் மாத்திரை குருத்தணுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும். இதன் மூலம் இழந்துவிட்ட பல் அமைப்பை மீண்டும் பெறுமளவுக்கு தானாகவே சரி செய்ய உதவக்கூடும் என்று இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பிரின் மாத்திரை

பட மூலாதாரம், Getty Images

"உண்மையிலேயே இங்கு நாங்கள் கூற வருவதெல்லாம், பற்களை அவற்றையே குணமாக்கிக்கொள்ளக்கூடிய சிகிச்சை முறை ஒன்றை வடிவமைத்துகொள்ள முடியும் என்று நம்புகின்றோம் என இக்ளஸ் எல் கரீம் கூறினார்.

தற்போதைய மருத்துவ சிகிச்சையான பற்களில் நிரப்புதலை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டு வராமல், படிப்படியாக புதிய சிகிச்சை முறை வரும்" என்று அவர் கூறியுள்ளார்.

புதிய உள் பல்கூழை உருவாக்க தேவைப்படக்கூடிய மரபணு முத்திரைகளை தூண்டுகின்ற ஒரு பொருளாக ஆஸ்பிரின் மாத்திரையை இனம்காண முந்தைய பெருமளவான ஆய்வு தரவுகளை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர்.

வட்டவடிவ தட்டை கண்ணாடி தட்டில், குருத்தணுக்களை ஆஸ்பிரினோடு சேர்த்து பெல்ஃபாஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிகிச்சை அளித்தபோது, மரபணு மற்றும் பொருள் ஆதாரமாகவும் இது உள் பல்கூழை உருவாக்க முடியும் என்பதை கண்டுபிடித்தனர்.

மருத்துவ ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

"உள் பற்கூழை மீண்டும் உருவாக்குவது மற்றும் நிரப்புதல் சிகிச்சை அளிப்பதை மாற்றிவிடுவதற்கு, ஆஸ்பிரினை பற்களுக்கு வழங்குவதை எப்படி செய்ய போகிறோம் என்பதுதான் அடுத்த செயல்பாடாக அமையும்" என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்பிரினை பற்களுக்கு வழங்குவது என்பது அதனை பல் சிதைவு ஏற்பட்டுள்ள பற்களில் எளிதாக போட்டுவிடுவதாக இருக்கப்போவதில்லை.

"நீண்ட நேரத்திற்கு பிறகு அதனை எளிதாக எடுத்துவிடக்கூடிய அளவில் நீங்கள் அதனை (பல்லில்) போடுவதுபோல இருக்க வேண்டும். பல் சிதைவு குழிக்குள் ஆஸ்பிரினை வைத்தால், அது அடித்து செல்லப்படும்" என்று டாக்கடர் எல் கரீம் கூறியுள்ளார்.

"இவ்வாறு செய்வதை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. இதனை அறிவியல்பூர்வமாக செய்ய வழியிருக்கிறது. இதனால், நோயாளிகளால் அல்ல, பல் மருத்துவர்களால் பயன்படுத்தக்கூடிய இறுதி மருந்துவ சிகிச்சை வடிவத்தை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பல் சொத்தையை நிரப்புதல்

பட மூலாதாரம், Getty Images

"சிகிச்சை சோதனைகளுக்கு பிறகு, அதனை பற்களில் வைப்பதற்கான ஒரு கருவியை வடிவமைக்க மருந்தக சக பணியாளர்களோடு முயற்சி எடுப்பதுதான் அடுத்த செயல்பாடாக இருக்கும்" என்று அவர் தெளிவாக்கியுள்ளார்.

ஆஸ்பிரின் மாத்திரை ஏற்கெனவே உரிமம் பெற்ற ஒரு மருந்தாக இருப்பது, இந்த புதிய சிகிச்சையை வடிவமைக்க உருவாக்குவதற்கு உதவும்.

"10 அல்லது 20 ஆண்டுகள் காலத்தில் வரக் கூடியதை பற்றி நாம் பேசவில்லை. வெகு விரைவாக நோயாளிகளோடு சிகிச்சை சோதனை நடைபெறலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நாம் சந்தித்து வருகின்ற பல் தொடர்பான பெரிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு நம்முடைய அணுகுமுறையை மாற்றுகின்ற பெரும் சாத்தியக்கூறு நிலவுகிறது" என்கிறார் டாக்டர் எல் கரீம்.

"இந்த புதிய அணுகுமுறை பற்களின் வாழ்நாளை அதிகரிப்பது மட்டுமல்ல, பிரிட்டன் தேசிய சுகாதார சேவைகள் மற்றும் உலக அளவிலான சுகாதார பராமரிப்பு அமைப்புகளுக்கு மிக பெரிய நிதி சேமிப்பாகவும் அமையும்" என்று டாக்டர் எல் கரீம் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

காணொளிக் குறிப்பு, அதிகரிக்கும் நட்சத்திர ஆமை கடத்தல்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :