நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்து இந்த 60 வயது இளைஞர் தப்பித்தது எப்படி?

கிரஹாம் வார்டிற்கு 60 வயது ஆகியிருந்த போது அவருக்கு டயாபடீஸ் 2 வகையைச் சேர்ந்த நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

பல தசாப்தங்களாக அதிகளவு சாப்பிட்டதாலும், மன அழுத்தத்தில் அதிகமாக மது குடித்ததாலும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ததாலும் தனக்கு இந்த நோய் வந்தது என்கிறார் கிரஹாம்.

கிரஹாம் மட்டும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை.

45 முதல் 64 வயதுடைய நடுத்தர வயதினரில், 42% பேர் நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரம் கூறுகிறது.

நடுத்தர வயதினர் தங்களது உடல்நிலையைப் பேணிக்க, சுறுசுறுப்பாக அடிக்கடி நடக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

40 முதல் 60 வயதுடையவர்கள் தினமும் வெறும் 10 நிமிடங்களாவது சுறுசுறுப்பாக நடக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நடுத்தர வயதினரில் ஐந்தில் ஒருவர், ஒரு வாரத்திற்கு 30 நிமிடத்திற்கும் குறைவாகவே உடற்பயிற்சி செய்வதாக இங்கிலாந்து பொது சுகாதாரம் கூறியுள்ளது.

தனக்கு நீரிழிவு நோய் இருப்பதை கிரஹாம் கண்டறிந்த போது, தன் பழக்க வழக்கங்கங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதை அவர் உணர்ந்தார்.

`` எனது உடைகள் மிகவும் இறுக்கமாகிக்கொண்டே போனது. அதிக எடை எப்படி எல்லாம் எனது வாழ்க்கையையும், உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது குறித்து அறிந்துக்கொண்டேன்`` என்கிறார் கிரஹாம்.

இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற மற்ற பிரச்சனைகள் ஏற்படவும் நீரிழிவு நோய் காரணமாகலாம். இதனால் பாதிக்கப்பட்டவரின் ஆயுட்காலம் வெகுவாக குறையும்.

உள்ளூர் நடைப்பயிற்சி குழுவுடன் இணைந்து தினமும் நடக்குமாறு, கிரஹாமின் மருத்துவர் அவருக்குப் பரிந்துரைத்தார்.

``முதலில் நடைப்பயிற்சியை ஆரம்பித்த போது சற்று பதற்றமாக உணர்ந்தேன். ஆரம்பத்தில் குழுவுடன் இணைந்து 1.9 மைல்களே நடந்தேன். பிறகு எனக்குள் இருந்த பயத்தில் இருந்து வெளிவந்துவிட்டேன்`` என்கிறார் கிரஹாம்.

பிறகு புதிய காலணி ஒன்றினை வாங்கிய கிரஹாம், படிப்படியாகத் தனது நடைப்பயிற்சியினை ஐந்து மைல்களாக உயர்த்தினார்.

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட 10,000 அடியினை தினமும் எடுத்து வைக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கிரஹாம் `பிடோமீட்டர்`-ஐ பயன்படுத்துகிறார்.

கிரஹாம் தற்போது தினமும் 15,000 அடி எடுத்து வைத்து நடந்து வருவதுடன், 22 கிலோ எடையினையும் குறைத்துள்ளார்.

``தற்போது எனது காற்சட்டைகள் எல்லாம் எனது இடுப்பு அளவிவை விட பெரியதாக உள்ளது. அதனால், எனது துணிகளை எல்லாம் தூக்கி எரிந்துவிட்டேன்`` என்கிறார்.

``நடைப்பயிற்சிக்கு பிறகு நான் ஆரோக்கியமாகவும், அதிக நம்பிக்கை கொண்டவனாகவும் மாறியிருக்கிறேன். அது மட்டுமல்ல நீங்கள் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்தால், உங்கள் பகுதியில் இதுவரை நீங்கள் பார்க்காத இடங்களைப் பார்க்கலாம்`` எனவும் கூறுகிறார்.

``முதல் சில வாரங்களில் உடல் குறையவில்லை என்றால் ஏமாற்றமடைய வேண்டாம்`` என மற்றவர்களுக்கு அவர் அறிவுரை வழங்குகிறார்.

`` தற்போது எனது பேரப்பிள்ளைகளுடன் விளையாடும் போது, எனக்கு முன்பு அவர்கள் சோர்வடைந்துவிடுகிறார்கள்`` என்கிறார் கிரஹாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :