அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் "இயேசுவின்" உருவத்தை கண்டதாகக் கூறும் தம்பதி

கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படத்தில் இயேசு கிறிஸ்துவை பார்க்க முடிவதாக ஒரு அமெரிக்க தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

அந்த ஸ்கேன் படத்தின் இடது ஓரத்தில் முள்முடி கிரிடத்தோடு, நீண்ட அங்கி அணிந்திருக்கும் ஒருவர், குழந்தையை பார்த்து கொண்டிருப்பது தெரிகிறது என்று பென்சில்வேனியாவை சேர்ந்த இந்த தம்பதியர் தெரிவிக்கின்றனர்.

"இந்தப் படம் என்னிடம் வழங்கப்பட்டபோது, தனக்கு அது இயேசு என்று தெரிந்தது" என்று தாயான அலிசியா ஸீக் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

முந்தைய இரண்டு மகப்பேற்றில் இருந்த சிக்கல்களுக்கு பின்னர் இந்த அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆறுதலை அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த தம்பதியருக்கு ஏற்கெனவே பிறந்திருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் பிறப்பு குறைபாடுகளோடு பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் மூத்த மகள் ஒரு கையில் இரண்டு கட்டைவிரல் இருக்கும் குறைபாடோடும், இரண்டாவது குழந்தை அண்ணப்பிளவோடும் (மேல் உதட்டில் பிளவு) பிறந்ததாக ஃபாக்ஸ்43 செய்தி நிறுவனத்திடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குடும்பம் பெரிய அளவு பயபக்தி உடைய குடும்பமாக இல்லாமல் இருந்தாலும், இந்த ஸ்கேன் படத்தை விண்ணகத்திலிருந்து வந்திருக்கும் அறிகுறியாக கருதுவதாக தந்தை ஸசாரி ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.

"வானத்தூதர் அல்லது கடவுள் அல்லது இயேசு என எப்படி வேண்டுமானாலும், நீங்கள் கூறலாம். நான் இதனை எனக்கு கிடைத்திருக்கும் ஆசீர்வாதமாக பார்க்கிறேன்" என்று ஸ்மித் கூறியுள்ளார்.

"நான் அதனை பார்த்தபோது, ஏறக்குறைய அழுதுவிட்டேன். பேச்சற்றுப்போனேன். என்னால் இதனை நம்ப முடியவில்லை" என்று தன்னுடைய உணர்வை அவர் பகிர்ந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை குழந்தை பிரியல்லா பிறந்துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :