You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் பாலியல் சீண்டல் வழக்கு ஏன் முக்கியமானது? - 4 காரணங்கள்
2013 -ல் தனது பின்பகுதியை பிடித்து அழுத்தியதாக முன்னாள் டிஜே ஒருவர் மீது தொடர்ந்த வழக்கில் அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் வெற்றி பெற்றுள்ளார்.
நீதிமன்றத்தில் டெய்லர் ஸ்விஃப்ட் மிக தைரியமாக அளித்த சாட்சியம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. ஆனால், டெய்லர் ஸ்விஃப்ட் தனக்காக மட்டும் இந்த வழக்கில் போராடவில்லை, இவரைப் போன்றே தினந்தோறும் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் அனைத்து பெண்களுக்காகவும் போராடியுள்ளார்.
இந்த வழக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு நான்கு காரணங்கள் இவை :
1. பாலியல் துன்புறுத்தல்களை வெளிக்கொணர்ந்தது
2013-ல் நடைபெற்ற இந்த சம்பவம் 2015-ல் தான் வெளிச்சத்திற்கு வந்தது. டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அவரது குழுவினர் முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து வானொலி தொகுப்பாளர் டேவிட் முல்லர் தனது வேலையை இழந்தார். இதனால், ஸ்விஃப்ட் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.
இதனைடுத்து, இதற்கு எதிராக பாலியல் சீண்டல் வழக்கை தொடுத்தார் டெய்லர் ஸ்விஃப்ட்.
நீதிமன்றத்தில் சாட்சியமளித்த டெய்லர் ஸ்விஃப்டின் தாயார் ஆண்ட்ரியா ஸ்விஃப்ட், "இந்த சம்பவம் அவரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை என்ற காரணத்திற்காக காவல்துறையிடம் நான் புகாரளிக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
"மேலும், அவரது வாழ்க்கை முழுவதும் இணையத்தில் பகடி செய்யப்படுவதையும், சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு நடந்த சம்பவத்தை மட்டும் முன்வைக்கமால், ஒவ்வொரு அமெரிக்க பெண்ணும் சந்திக்கும் இதுபோன்ற பாலியல் ரீதியான தாக்குதல்களை அதிகாரிகள் முன்னிலையில் ஸ்விஃப்ட் கூறினார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ராய்ன் அமைப்பின் தகவலின் படி, அமெரிக்காவில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களில் மூன்றில் இரண்டு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் மீதுள்ள நம்பிக்கையின்மை, பயம் உள்ளிட்ட காரணங்களால் இது போன்ற சம்பவங்கள் பொது வெளிக்கு வருவதில்லை.
பின்வாங்க மறுத்தார்
இந்த வழக்கு விசாரணையை தீவிரமாக உற்று நோக்கினால், குற்றம் சாட்டப்பட்ட நபரின் நம்பகத்தன்மைக்கு ஆபத்து நேர்வதைத் தடுக்க வழக்கறிஞர்கள் எவ்வாறு முயற்சித்தனர் என்பதை அறிய முடியும்.
ஆனால், பல்வேறு தடைகள் வந்தபோதிலும் டெய்லர் ஸ்விஃப்ட் இந்த வழக்கில் இருந்து பின்வாங்க மறுத்துவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது, சம்பவம் நடைபெற்ற தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், உடலின் முன் பகுதியில் எந்தவித மாற்றங்களும் தெரியவில்லை என்று கேள்வியெழுப்பிய போது, "எனது புட்டம் உடலின் பின்பகுதியில் இருந்தது" என்று அவர் பதிலளித்துள்ளார்.
மேலும், "இதை செய்தது யார் என்று எனக்கு நன்றாகவே தெரியும், இது குற்றச்சாட்டு இல்லை, இது தான் உண்மை" என்றும் ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
3. மிகப்பெரிய பாடமும் வெற்றியும்
இந்த வழக்கில் ஒரே ஒரு அமெரிக்க டாலர் மட்டும் தனக்கு நஷ்ட ஈடாக அளிக்கும்படி கூறிய ஸ்விஃப்ட், பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்கவுள்ளதாக உறிதியளித்துள்ளார்.
"இதுபோன்ற ஒரு விசாரணையின் மூலம் இந்த சமுதாயத்திலிருந்து, என்னை பாதுகாப்பதற்கான மிகப்பெரிய பாடத்தை இதன் மூலம் பெற்றுக்கொண்டதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பாதிக்கப்பட்ட மற்றவர்களின் குரல்களும் வெளிவர உதவுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றும் ஸ்விஃப்ட் தெரிவித்துள்ளார்.
ஸ்விஃப்டின் இந்த செயல்பாடு மற்ற பெண்களால் வெகுவாக பாரட்டப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்களும் அவருக்கு வெகுவாக ஆதரவளித்து வருகின்றனர்.
4. பாதிக்கப்பட்ட பிரபலம்
பொதுவாக பிரபலங்கள் ஈடுபடும் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரபலமாகவும், பாதிக்கப்பட்டவர் சாதாரண நபராகவும் இருப்பார். ஆனால் இந்த வழக்கில் அது தலைகீழாக இருக்கிறது.
மேலும், முதன் முதலில் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்த பாப் பாடாகியும் இவர்தான்.
சாதாரண பெண்கள் மட்டுமல்லாமல், அவரது துறையான இசைத் துறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்