You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மொட்டையடிக்க வந்த மன அழுத்தம் கொண்ட பெண்ணை அழகுபடுத்தி அசத்திய அலங்கார நிபுணர்
மனநிலையில் பாதிப்பிருந்தால் நமக்கு அழகு குறித்த சிந்தனைகள் பெரிதாக வருவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பதின்ம வயது பெண் ஒருவரின் கதையை பதிவிட, அது சமூக ஊடகத்தில் பெரிதும் பகிரப்பட்டுள்ளது.
20 வயதாகும் கேலே ஓல்சன் படித்துக் கொண்டே சிகை அலங்கார நி்புணராக உள்ளார். அவர் தனது சலூனிற்கு அதிக அடர்த்தியும், முழுதும் சிக்கலான சிகையுடன் வந்த ஒரு பெண்ணின் கதையை செவ்வாய்கிழமையன்று முகநூலில் பகிர்ந்துள்ளார்.
"இன்று நான் ஒரு கடினமான அனுபவத்தை சந்தித்தேன். பல வருடங்களாக தீவிர மன அழுத்தத்தில் இருந்த ஒரு 16 வயது பெண், எனது சலூனிற்கு வந்தார்" என்று எழுதப்பட்டிருந்த கேலேவின் பதிவு 55,000 முறை பகிரப்பட்டுள்ளது.
தான் மிகவும் சோகமாக உணர்ந்ததாகவும், தனது முடியை கோத முடியாத மனநிலையில் தான் இருந்ததாகவும், கழிப்பறைக்கு செல்ல மட்டும்தான் எழுந்துச் சென்றதாகவும் அப்பெண் கேலேயிடம் தெரிவித்துள்ளார்.
அந்த பதின்ம வயது பெண்ணின் பள்ளியில் புகைப்படம் எடுக்க இருந்ததால், தனது சிக்கலும் முடிச்சுகளும் நிறைந்த அடர்த்தியான முடியை கோதும்போது ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல், சலுனிற்கு வந்து அதனை மொட்டை அடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அழகு தெரபி மாணவர்களான கேலே மற்றும் அவரது சக பணியாளர் மரியா வெஞ்சர் ஆகிய இருவரும், இடுப்பளவு இருந்த அந்த பதின்ம வயது பெண்ணின் முடியை வெட்டுவதற்கு மறுத்துவிட்டனர்.
"அந்த பெண்ணின் முடியை வெட்டுவது என்பது எனது முடிவாக இல்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முடியை வைத்திருக்க வேண்டும்" என்று நாங்கள் முடிவு செய்தோம் என கேலே பிபிசியிடம் தெரிவித்தார்.
"மொட்டையடிப்பது கடைசி முடிவாக இருந்தது; மேலும் அதனை யாரும் செய்ய விரும்பவும் இல்லை" என்கிறார் மரியா.
இரண்டு நாட்கள் செலவழித்து, 10 மணி நேரமாக அந்த பதின்ம வயது பெண்ணின் முடியை கேலேயும், மரியாவும் சரி செய்துள்ளனர்.
முடியில் இருந்த கடினமான முடிச்சுகளை எடுக்கும் போது ஏற்படும் வலியை அப்பெண் மறக்கவும், அவரின் மதிப்பு மற்றும் தன்னபிக்கையை கூட்டுவதற்கு, உத்வேகம் தரும் வார்த்தைகளும், நம்பிக்கை அளிக்கக்கூடிய பேச்சும், உரையாடலும் தேவைபட்டது என்கிறார் மரியா.
"பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் கோபம் ஆகியவற்றால் நான் போராடியதால் அப்பெண்ணின் மனநிலையுடனும், அவர்களின் தினசரி போராட்டங்களுடன் என்னால் அதிகமாக பொருந்தி பார்க்க முடிந்தது" என்கிறார் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மரியா.
"உபயோகமற்றவரை போன்று உணர்வதன் வலியை என்னால் நன்றாக புரிந்துக் கொள்ள முடிந்தது; ஒரு குழந்தை நிச்சயமாக அவ்வாறு உணரக்கூடாது. பிறர் எனக்கு உதவியது போல் நான் அவருக்கு உதவ வேண்டும் என்று தெரிந்திருந்தது. நாம் எல்லாரும் அழகாய் இருப்பதற்கு நமக்கு உரிமை உண்டு."
தோள்பட்டை வரை சிக்கெடுத்து அப்பெண்ணின் முடியை வெட்டி, வடிவுப்படுத்தியுள்ளனர் கேலேயும் மரியாவும்.
"எங்களுக்கு மகிழ்ச்சியில் கண்ணீர் வந்துவிட்டது; இன்று எனது பள்ளி புகைப்படத்தில் நான் சிரித்துக் கொண்டிருப்பேன், என்னை மீண்டும் நான் உணர வைத்ததற்கு நன்றி" என அப்பெண் கேலேயிடன் தெரிவித்ததை விளக்குகிறார் கேலே.
இந்த முகநூல் பதிவிற்கு 60,000 பேர் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்; அதில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களின் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர்.
"இது எனக்கும் நடந்துள்ளது. எனக்கு `பை போலார்’ குறைபாடு உள்ளது; அதில் ஒரு சமயத்தில் நான் எனது முடியை சீவ மாட்டேன் அல்லது என்னை பார்த்துக் கொள்ள மாட்டேன்; ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள், நீ தனியாக இல்லை" என சாரா லீ என்ற ஒருவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
"நான் என்னுடைய மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்துடன் போராடி வருகிறேன். மெத்தையைவிட்டு எழுந்து செல்ல கூட எனக்கு கடினமாக இருக்கும் நான் எதிர்மறையான எண்ணங்களுடன் தொடர்ந்து போராடி வருகிறேன். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்களுக்கான மதிப்பு அதிகம்" என ஒரு பெண் கருத்து பதிவிட்டுள்ளார்.
"மனநிலை குறைபாடு குறித்து புரிந்து கொள்பவர்களும் இங்கு உள்ளார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அச்சிறுபெண் குறித்து அக்கறை எடுத்துக் கொண்டதற்கு நன்றி" என ஒரு ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- நீட் தேர்வுக்கு தற்காலிக விலக்கு மட்டுமே; குழப்பத்தில் மாணவர்கள்?
- இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
- மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்
- வைட்டமின் பி3 உட்கொண்டால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு வாய்ப்புகள் குறையும் - ஆய்வு
- சென்னைக்கு வயசு எத்தனை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்