You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நண்பரை சந்திப்பதற்காக பச்சிளம் குழந்தையை புதருக்கடியில் விட்டுச் சென்ற தாய் !
வார விடுமுறை நாட்களில் நண்பரை பார்ப்பதற்காக வெளியூர் சென்ற இளம்பெண் ஒருவர், தனது பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து புதருக்கடியில் விட்டுச் சென்றதாகவும், அந்த பகுதியில் உள்ள சிலர் மூன்று நாட்களுக்கு பிறகு அந்த குழந்தையை கண்டெடுத்துள்ளதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியட் ஹாய்ட் என்ற அந்த 17 வயது இளம்பெண், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு நியூயார்க்கில் உள்ள எல்மிரா பகுதியில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிறந்து எட்டு மாதம் ஆன அந்த பெண் குழந்தையின் மீது புழுக்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. சூரிய ஒளியின் வெப்பத்தால் தோலில் காயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது.
பெயர் வெளியிடப்படாத அந்த பெண் குழந்தையின் உடலில் துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளம் ஏதும் இல்லை என சேமங் மாவட்ட வழக்கறிஞரான வீடன் வெட்மோர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட குழந்தை, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது நலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை கய்லா மற்றும் கரென் சீல்ஸ் என்ற சகோதரிகள், வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்த அந்த பெண் குழந்தையை கண்டெடுத்துள்ளனர்.
`வீட்டிலிருந்து வெளியே வந்த என்னுடைய சகோதரி ,கையில் ஒரு சிறு குச்சியுடன் அந்த பிளாஸ்டிக் பை இருந்த, பக்கத்து வீட்டின் தாழ்வாரத்தை நோக்கி சென்றார். அதனை அவர் நாய் என நினைத்தார்.` என `வெனி` என்ற உள்ளூர் தொலைக்காட்சிக்கு கரென் பேட்டியளித்துள்ளார்.
`அந்த பையிலிருந்து குழந்தையின் கால்கள் மட்டும் வெளியில் தொங்கிக் கொண்டிருந்தன. அவளது தலை பைக்குள் இருந்தது. அவளுடைய முழு தலையும் பிளாஸ்டிக் பைக்குள்தான் இருந்தது.` என கைலா தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பைக்குள் குழந்தை இருப்பதை பார்த்த சகோதரிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அழுக்கடைந்த துணியை அணிந்திருந்த அந்த குழந்தையை சுத்தம் செய்துள்ளனர்.
`அவளுடைய கழுத்தில் புழுக்கள் ஊர்ந்துக் கொண்டிருந்தன. அதனால் ஏற்பட்ட அரிப்பினால் அவள் அழுதுகொண்டே இருந்தாள். அவளுடைய நெஞ்சில் தழும்புகள் இருந்தன. கைகள் மற்றும் கால்களில் சூரிய ஒளியின் வெப்பத்தினால் ஏற்பட்ட காயங்கள் இருந்தன. அவளால் மூச்சு கூட விட முடியவில்லை. அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தது.` என வெனி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கய்லா சீல்ஸ் தெரிவித்துள்ளார்.
குழந்தையை காப்பாற்றிய அந்த இரண்டு பெண்களையும் `கதாநாயகர்கள்` என எல்மிரா நகர காவல்துறை பாராட்டியுள்ளது.
கைக்குழந்தைகளை மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் போன்ற பாதுகாப்பான இடங்களில் பெற்றோர்கள் விட்டுச் செல்வதை நியூயார்க் நகரம் அனுமதிக்கிறது. ஆனால் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்ணிற்கு எந்த சட்ட உதவிகளும் கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
2,50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பிணைத்தொகை ஹாய்ட்டிற்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- பக்கத்தில் பயணிப்பவர் ஆபாசப்படம் பார்த்தால் நாம் என்ன செய்வது?
- வார்த்தைப் போரின் "மூலமும்" வட கொரியாவின் தேவையும்
- திருடிவிட்டு கழிவறையை சுத்தம் செய்ய மறந்ததால் சிக்கிக்கொண்ட நபர்
- சினிமா விமர்சனம் : பொதுவாக எம்மனசு தங்கம்
- ரூமேனியாவின் இணையவழிப் பாலியல் தொழில்: உள்ளே நடப்பது என்ன?
- யார் "420"? எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் பரஸ்பரம் குற்றச்சாட்டு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்