You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
91 வயது அழகியின் அசாதாரண வாழ்க்கை கதை
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் அழகிப் பட்டத்தை பெற்றவரான, 91 வயதான கிரைஸ்டினா ஃபார்லியின் வாழ்க்கை எப்போதும் இந்தளவு அழகாக இருந்ததில்லை. போலந்தின் கிராமப்புற பகுதியில் ஒரு அன்பான குடும்பத்தில் வளர்ந்தவர் என்றாலும், திடீரென உருவான போர் இவரது குழந்தை பருவத்தையே பாதித்தது.
``எனது தோல் அழகானது. அதனால் நான் எந்த ஒப்பனையும் செய்ய மாட்டேன். வெறும் உதட்டுச் சாயம் மட்டும் போதுமானது`` என்கிறார் கிரைஸ்டினா ஃபார்லி.
விரைவில் 92 வயதை அடைய உள்ள கிரைஸ்டினா, கடந்த ஆண்டு ` திருமதி கனெக்டிகட் மூத்த அமெரிக்கர்` என்ற அழகிப்பட்டத்தை பெற்றுள்ளார்.
அழகிப் போட்டியினை தான் விரும்புவதற்கான காரணத்தை விவரிக்கும் கிரைஸ்டினா,`` நீங்கள் 60 வயதை அடைந்துவிட்டாலே உங்களது ஆயுள் முடிந்துவிட்டது என மக்கள் நினைப்பார்கள். உங்களால் நடனம் ஆட முடியும், படம் வரைய முடியும் மற்றும் நீங்கள் நினைப்பது அனைத்தையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கலாம்`` என்கிறார்.
1925-ம் ஆண்டு கிழக்கு போலந்தில் பிறந்தவர் கிரைஸ்டினா. முதலாம் உலக போரில் ராணுவத்தில் பணியாற்றியதற்காக, கிரைஸ்டினா தந்தைக்கு கொடுக்கப்பட்ட 35 ஏக்கர் நிலத்தில் அக்குடும்பம் நிம்மதியுடன் வாழ்ந்தது.
கிரைஸ்டினாவுக்கு 14 வயதாகும்போது, ஜெர்மனியும், சோவியத் ஒன்றியமும் போலாந்து மீது படையெடுத்தது. இது இரண்டாம் உலகப்போருக்கு தூண்டுகோலாக அமைந்தது.
ஆயிரக்கணக்கான போலந்து மக்களைப் போலவே கிரைஸ்டினா குடும்பமும், ரஷ்ய ராணுவம் மற்றும் உக்ரேனிய காவல்துறையால் சுற்றிவளைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கால்நடைகளை ஏற்றிச்செல்லும் ரயிலில் அடைக்கப்பட்டு, உரால் மலைகளின் உறைந்த காடுகளை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிறகு, ரஷ்யா தொழிலாளர் முகாமில் கிரைஸ்டினா குடும்பத்திற்கு மரம் அறுக்கும் வேலை ஒதுக்கப்பட்டது. 1941-ம் ஆண்டு ஜெர்மனி சோவித் யூனியனை தாக்கும் வரையில், இக்குடும்பம் அங்கு மோசமான இரண்டு ஆண்டுகளைக் கழித்தது.
ஹிட்லரை எதிர்த்துச் சண்டையிட ராணுவ வீரர்கள் தேவைப்பட்டதால் கிரைஸ்டினா குடும்பத்தை போன்ற முன்னாள் ராணுவ வீரர்களில் குடும்பத்தை சோவியத் விடுவித்தது.
ஜெர்மனியை எதிர்த்து பேரிட அமைக்கப்பட்ட புதிய போலாந்து ராணுவ படையில் கிரைஸ்டினாவின் அப்பா சேர்ந்துகொள்ளப்பட்டார். அச்சயமத்தில் ஹிட்லர் கிழக்கு போலாந்தை கைப்பற்றியதால், முகாம்களில் இருந்து வெளியேறிய பெண்களாலும், குழந்தைகளாலும் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை.
அங்கிருந்து மக்களுடன் கூட்டமாக கப்பலில் ஈரான் வந்தடைந்த கிரைஸ்டினா, ஜெர்மனியை எதிர்க்க அமைக்கப்பட்ட போலிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். இராக், எகிப்து போன்ற பகுதிகளில் ராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அவர், அதே ராணுவ படையில் பணியாற்றிய தனது தந்தையுடன் மீண்டும் ஒன்று சேர்ந்தார்.
கிரஸ்டைனா என்பவரை கிரைஸ்டினா திருமணம் செய்துகொண்டு ப்ரிட்டனில் குடியேறிய நிலையில், மதுவின் காரணமாக அவரது கணவர் உயிரிழந்தார். கணவர் விட்டுச் சென்ற போது கிரைஸ்டினாவிற்கு அவரது குழந்தைகள் மட்டுமே ஆறுதலாக இருந்தன.
வறுமையில் இருந்து தனது குழந்தைகளைக் காப்பாற்ற சிறுவர்களுக்கு நடனம் கற்றுத்தர ஆரம்பித்த அவரை, மறு திருமணம் செய்யத் தந்தை வற்புறுத்திய போதும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
1955-ல் ஒரு ஆர்வத்தில் நான்கு குழந்தைகளுடனும், கையில் சில நூறு டாலர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் தனது குழந்தைகளுக்காகவும், தனக்காவும் ஒரு புதிய வாழ்க்கையினை தொடங்கி அவர், தனது 50வது வயதில் எட் பார்லீ என்பவருடன் மணம் முடித்தார்.
கனெக்டிகட் மாகாணத்தின் உள்ள போலாந்து மக்களிள் நடத்தும் அமைப்புகளில் கிரைஸ்டினா ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறார்.
``அனைத்து விதமான கிளப்களிலும் நான் சேர்ந்து பணியாற்றினேன். குழந்தைகளுக்கு போலந்து நடனத்தைக் கற்றுத்தருவது என என்னை எப்போதும் ஆர்வமாக வைத்திருப்பேன்`` என்கிறார் அவர்.
அமெரிக்காவின் பாரம்பரிய அழகிப்போட்டி குறித்து தாமதமாகவே அறிந்துகொண்ட அவர், தனது 70வது வயதில் முதல்முறையாக ``திருமதி கனெக்டிகட் மூத்த அமெரிக்கர்`` என்ற அழகிப்போட்டியில் கலந்துகொண்டார்.
முதல் இரண்டு முயற்சிகள் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்றாலும். 2016-ல் முன்றாம் முறையாக முயன்று அழகிப்பட்டத்தை வென்றார்.
``எனக்குப் பல திறமைகள் உள்ளது. என்னால் கவிதை வாசிக்க முடியும், நடனம் ஆட முடியும், பாடல் பாட முடியும்`` என்கிறார்.
``அனைவர் மீது அன்பு செலுத்துவது, அனைவருக்கும் நல்லது செய்வது இதுவே எனது வாழ்க்கைத் தத்துவம்.`` என்கிறார் கிரைஸ்டினா.
2017-ம் ஆண்டு பட்டம் வெல்ல உள்ள அழகிக்குத் தனது கிரீடத்தை மே மாதம் ஒப்படைக்க உள்ள கிரைஸ்டினா, ஆகஸ்ட் மாதம் தனது 92வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார்.
``எது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயராக இருக்கிறேன். எதுவும் ஆகாது என தெரியும். ஆனாலும் நான் எப்போதும் தயாராக இருப்பேன்`` என்கிறார் கிரைஸ்டினா.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்