கணிதவியலில் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி மரணம்

மதிப்புமிக்க "கணிதவியலில் ஃபீல்ட்ஸ் பதக்கம்" பெற்ற முதலாவது பெண் மர்யாம் மிர்ஸகானி, அமெரிக்காவில் காலமானார்.

நாற்பது வயதான அவருக்கு ஏற்பட்ட மார்பகப் புற்றுநோய், எலும்புகளுக்கும் பரவியிருந்தது.

"கணிதவியலுக்கான நோபல் பரிசு" என அழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம், நாற்பது வயதுக்கு உள்பட்ட கணித மேதைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

இந்த பதக்கம் இரானியரான பேராசிரியர் மிர்ஸகானிக்கு 2014-இல் "சிக்கலான வடிவியல் மற்றும் இயக்கவியல் முறைகள்" (complex geometry and dynamical systems) பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.

"ஒரு விளக்கு இன்று அணைக்கப்பட்டு விட்டது. அது எனது இதயத்தை நொறுக்குகிறது... வெகு தூரத்துக்கு விரைவாகவே சென்று விட்டார்" என்று மிர்ஸகானியின் நண்பரும் நாசா விஞ்ஞானியுமான ஃபிரோஸ் நதேரி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

1977-ஆம் ஆண்டில் பிறந்த பேராசிரியர் மிர்ஸகானி, இரானின் புரட்சிக்கு பிந்தைய காலத்தில் வளர்ந்தவர்.

பருவ வயதினருக்கான சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் அவர் இரு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2004-இல் முனைவர் பட்டம் பெற்ற பின்னர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு கணிதவியல் ஃபீல்ட்ஸ் பதக்கம் கிடைத்ததும், 1936-இல் நிறுவப்பட்ட அப்பதக்கத்துக்காக நீண்ட காலம் காத்திருந்த கணித சமுதாய பெண்களின் நிலை முடிவுக்கு வந்தது.

அப்பதக்கத்தைப் பெறும் முதலாவது இரானியராகவும் அவர் திகழ்ந்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பதக்கத்துக்கான தேர்வுக் குழு உறுப்பினரான பேராசிரியர் டேம் பிரான்ஸிஸ் கிர்வான் ஒரு முறை கூறும்போது, "இந்த நாட்டிலும் உலகம் முழுவதும் தங்கள் சுயதிறன் மீது நம்பிக்கை கொள்ளவும், எதிர்காலத்தில் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெறுபவராக வர வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயல்பட ஏராளமான சிறுமிகளையும் இளம் பெண்களையும் இந்த விருது ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்