You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லியு: மக்களின் கதாநாயகன், சீன அரசுக்கு `வில்லன்'
மனித உரிமை போராளியாக இருந்து வியாழக்கிழமை காலமான லியு ஷியாவ்போ, மக்களால் கதாநாயகனாக பார்க்கப்பட்ட நிலையில் சீன அரசு வில்லனாக பார்த்தது.
2010 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அரசியல் ஆர்வலரான லியு ஷியாவ்போ, சீனாவில் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் "முதன்மையான அடையாளமாக" பார்க்கப்படுகிறார்.
இருப்பினும், "அரசு அதிகாரத்தைத் அழிக்க விரும்பும்" குற்றவியல் நோக்கம் கொண்டவர் லியு ஷியாவ்போ, என சீன அதிகாரிகள் கூறுகின்றனர். போராட்டங்களுக்காக பலமுறை லியு மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான 61 வயதான லியு ஷியாவ்போ, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ பரோலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான கடுமையான அரசியல் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களுக்காக பரவலாக அறியப்பட்ட லியு, சீனா, ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தார்.
1989 இல் தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான சார்பு போராட்டத்தில் அவர் முக்கிய பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார்.
வடகிழக்கு சீனாவின் இளம் பல்கலைக் கழக பேராசிரியரான வயதான லியு ஷியாவ்போ, நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியராக பணிபுரிந்தார். மாணவர் போராட்டங்களில் பங்கு பெறுவதற்காக அவர் பெய்ஜிங்கிற்கு விமானத்தில் வந்தார். ஆர்ப்பாட்டங்களைத் நசுக்க, படைகளுக்கு அதிகாரிகள் கட்டளையிட்டபோது, போரட்டம் ரத்தக்களறியில் முடிந்தது.
போராட்டத்தில் இருந்து சமாதான முறையில் வெளியேறுவதற்காக படைகளுடன் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட லியுவும், வேறு சிலரும் நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றியதற்காக பாராட்டப்பட்டார்கள்.
லியுவுக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கிடைத்தபோதிலும், அவர் சீனாவில் வசிப்பதையே விரும்பி தேர்ந்தெடுத்து திரும்பி வந்துவிட்டார். அரசாங்க ஒடுக்குமுறையால் பிறகு கைது செய்யப்பட்ட அவர், 1991 இல் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த லியு ஷியாவ்போ, தியனன்மென் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக பிரசாரம் செய்தார். அதற்காக, மீண்டும் கைது செய்யப்பட்டு, தொழிலாளர் முகாமில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
அதிகாரத்தினரால் குறிவைக்கப்பட்டவராக லியு ஷியாவ்போ இருந்தபோதிலும், 1996இல் சிறையில் இருந்தபோது, லியு ஜியா என்ற கலைஞரை திருமணம் செய்துக்க்கொண்டார்.
பல்கலைக்கழத்தில் வேலை செய்வதை தடுத்த சீன அரசு, அவருடைய புத்தகங்களை சீனாவில் தடை செய்தபோதிலும், லியு தனது போராட்டங்களை தொடர்ந்தார்.
2008இல், லியுவும், அறிவுஜீவிகள் கொண்ட குழுவினரும் சேர்ந்து சாசனம் 08 என்ற அறிக்கையை உருவாக்கினார்கள்.
சீனாவில் ஒரு புதிய அரசியலமைப்பு மற்றும் சட்டமன்ற ஜனநாயகம் உள்ளிட்ட பல தொடர்ச்சியான ஜனநாயக சீர்திருத்தங்கள் பற்றி இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நவீனமயமாக்கும் அணுகுமுறையை "பேரழிவு" என்றும் இந்த சாசனம் குறிப்பிடுகிறது.
அதுவரை சற்றேனும் பொறுமை காத்துவந்த சீன அரசு இதனால் அதிக சீற்றம் அடைந்தது. ஆன்லைனில் இந்த அறிக்கை வெளிவருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக காவல்துறையினர் லியுவின் வீட்டில் சோதனை மேற்கொண்டு அவரை கொண்டு சென்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு ஒரு வருடம் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த லியுவுக்கு, 2009 கிறிஸ்துமஸ் தினத்தன்று 11 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்ட்து.
நோபல் பரிசு சர்ச்சை
அதற்கு அடுத்த அண்டு லியு ஷியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு குழுவினர், நீண்டகாலமாக அகிம்சை முறையில் போராட்டம் நடத்தியதற்காக அவரை பாராட்டினார்கள்.
நோபல் பரிசு அறிவிப்பினால் சீற்றமடைந்த சீனா, பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்ல லியுவுக்கு அனுமதி மறுத்துவிட்டது, நோபல் பரிசு பெற்றவரின் நாற்காலி காலியாக இருந்ததையே ஊடகங்கள் படமெடுத்தன.
நோபால் பரிசு வழங்கப்பட்ட சில நாட்களிலேயே, லியு ஷியாவ்போவின் மனைவு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, அவரது குடும்பம் மற்றும் ஆதரவாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவரது நடவடிக்கைகளை முடக்கியதற்கான காரணத்தை சீன அதிகாரிகள் ஒருபோதும் சொன்னதே கிடையாது.
அவரின் சிறைதண்டனை முடிவடைய மூன்று ஆண்டுகள் மீதமிருந்த நிலையில், 2017, மே மாதம் 23 ஆம் தேதி, லியுவுக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. வடகிழக்கு நகரான ஷென்யாங்கில் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்தாலும், லியு, ஜனநாயக சீனா உருவாகும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.
"சீனாவின் அரசியல் முன்னேற்றம் நிறுத்தப்படாது என்று நான் உறுதியாக நம்புகிறேன், நேர்மறை எண்ணங்களுடன் எதிர்காலத்தில் சுதந்திர சீனா மலர்வதற்காக நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று 2009 ஆம் ஆண்டு விசாரணைக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் லியு ஷியாவ்போ தெரிவித்திருந்தார்.
"சுதந்திரத்திற்கான மனிதர்களின் தேடலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எந்த சக்தியாலும் முடியாது, இறுதியில் சீனா சட்டத்தால் ஆளப்படும் ஒரு தேசமாக மாறும், அங்கு மனித உரிமைகள் மேலோங்கி நிற்கும்" என்பதே அவரது கருத்தாக இருந்தது.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்