லண்டன் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ

வடக்கு லண்டனில் உள்ள கேம்டென் லாக் மார்க்கெட்டில், நள்ளிரவில் பெரும் தீ ஏற்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக இருக்கும் அந்த இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 70 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

தீ "மிக வேகமாக" பரவியதாகவும் அருகிலுள்ள கட்டடங்களுக்கு பரவி வெடி விபத்து நேரிடும் என அச்சம் கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை தங்களிடம் சிகிச்சைக்காக யாரும் வரவில்லை என லண்டன் அவசர ஊர்தி சேவை தெரிவித்துள்ளது; மேலும் மெட்ரோ போலிஸாரும் சம்பவ இடத்தில் உள்ளனர்.

கேம்டென் லாக்கில் உள்ள கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிவது போன்று புகைப்படங்கள் காட்டுகின்றன.

சம்பவத்தை நேரில் பார்த்த 24 வயதாகும் ஜோன் ரைப்ஸ் கூறுகையில், "நான் சம்பவ இடத்தை கடந்து கொண்டிருந்த போது கட்டடம் தீப்பிடித்து எரிந்ததை பார்த்தேன் மேலும் தீயணைப்பு வீரர்களும் போலிஸாரும் வர தொடங்கினர்; அது எல்லாமே மிக வேகமாக நடந்தது" என்றார்.

"போக்குவரத்தை நிறுத்த சாலையை மூடுமாறு நாங்கள் போலிஸாரிடம் கேட்டுக் கொண்டோம். அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு தீ காற்றில் பரவியது."

"தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. மக்கள் அதனை பார்த்துக் கொண்டிருந்தனர்; ஆனால் அருகாமையில் உள்ள உணவகங்களில் சமைலயறை இருப்பதால் எந்த நேரத்திலும் வெடி விபத்து ஏற்படலாம் என்று நாங்கள் அஞ்சினோம்." என்று தெரிவித்துள்ளார் ஜோன் ரைப்ஸ்.

தொடர்புடைய செய்திகள்:

மருத்துவக் குழு தலைவரையும், ஆபத்துக் கால மீட்புக் குழுவையும் அனுப்பியுள்ளதாக லண்டன் அவசர ஊர்தி சேவை தெரிவித்துள்ளது.

"அதிகாரிகள் வரும் வேளையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும். யாரேனும் காயமடைந்துள்ளனரா என்பதை தற்போது சொல்ல இயலாது" என்றும் போலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று மணியளவில், "தீ கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் காலைக்குள் தீயை அணைத்துவிடுவதாகவும் தீயணைப்புப் படை தெரிவித்தது. தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.

சமீப வருடங்களில் பரந்த மார்கெட் பகுதிகளில் இதுவரை இரண்டு முறை தீப்பிடித்துள்ளது.

2008ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதியன்று, ஹேலி ஆம்ஸ் மார்கெட்டில் ஏற்பட்ட தீயில் 6 கடைகளும், 90 மார்க்கெட் கடைகளும் சேதமடைந்தன.

2014ஆம் ஆண்டு ஸ்டேபல்ஸ் சந்தையில் ஏற்பட்ட தீயில் சுமார் 600 பேர் உயிர் தப்பினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :