You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவிற்குச் செல்லும் மேலும் இரண்டு விமான சேவைகளில் லேப்டாப் தடை நீக்கம்
அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் பயன்படுத்தக்கூடாது என்ற தடை நீக்கப்பட்ட விமான சேவை நிறுவனங்கள் வரிசையில் சமீபமாக 'குவைத் ஏர்வேஸ்' மற்றும் 'ராயல் ஜோர்டானியன்' விமான சேவை நிறுவனங்களும் இணைந்துள்ளன.
குவைத் மற்றும் ஜோர்டானிலிருந்து வரும் விமானங்களில் பாதுகாப்பு சோதனைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக இரண்டு விமான சேவை நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
மின்னணு சாதனங்களில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற அச்சத்தில் எட்டு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வரும் நேரடி விமானங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்த மார்ச் மாதம் முதல் அமெரிக்கா தடை விதித்தது.
எட்டிஹாட், துருக்கிய விமான சேவை, எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய விமான சேவைகளின் தடைகள் கடந்த வாரம் நீக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்:
ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து மூன்று அமெரிக்க நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் ராயல் ஜோர்டானியன் விமான சேவையில் அமெரிக்க விமானங்களுக்கான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு, தடை நீங்கியதாக விமான சேவையின் தலைவர் ஸ்டீஃபன் பிச்சலர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தின் வழியாக குவைத்திலிருந்து நியூயார்க்கிற்கு செல்லும், குவைத் அரசாங்கத்திற்கு சொந்தமான குவைத் ஏர்வேஸ் விமானத்தின் பாதுகாப்பு செயல்பாட்டை அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்த பிறகு தடை நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு
105 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் விமானங்களின் பயணிகள் மற்றும் மின்னணு சாதனங்களை கூடுதல் நேரம் சோதனையிடும் பாதுகாப்பு நடவடிக்கையை அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்த மாற்றங்கள், மின்னணு சாதனங்களுக்கான தடையை நீக்குவதற்கு வழிவகுக்கும் என அச்சமயத்தில் விமான சேவை நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்தன.
மொராக்கோ, எகிப்து மற்றும் செளதி அரேபியாவில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் தடை நீக்க அறிவிப்பை வெளியிட உள்ளன.
செளதி அரசாங்கத்தின் விமான சேவையான செளதியா, வரும் ஜூலை 19ஆம் தேதியிலிருந்து, அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் பயணிகள் தங்கள் மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லலாம் என அறிவித்துள்ளது.
மொராக்கோ நகரான காசாப்ளான்காவிலிருந்து இயக்கப்படும் விமானங்களின் தடையும் அதே தேதியில் நீக்கப்படலாம் என ராயல் ஏர் மரோக் நிறுவனம் நம்புவதாக மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்