ட்விட்டரில் இணைந்தார் இளம் பெண் உரிமை போராளி மலாலா

தாலிபன் துப்பாக்கிதாரிகளால் தலையில் சுடப்பட்டு பின் உயிர்பிழைத்த பாகிஸ்தான் பிரசாரகரான மலாலா யூசஃப்சாய் சமூக ஊடகமான ட்விட்டரில் இணைந்து பெண்களின் கல்விக்காக போராட தனக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

19 வயதாகும் மலாலா, தனது பள்ளிக் கல்வியை முடித்த தினத்தில் சமூக ஊடகமான ட்விட்டரிலும் தன்னுடைய முதல் ட்வீட் பதிவை பதிந்துள்ளார். அதில், கசப்பும் இனிப்பும் கலந்த தருணமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதுபோன்று வாய்ப்பு கிடைக்காத மில்லியன் கணக்கான பெண்களை நினைத்து தனது எண்ணங்கள் இருப்பதாக மலாலா தெரிவித்துள்ளார்.

பெண்களின் கல்வி குறித்து இணைய வலைப்பூவில் மலாலா எழுதத் தொடங்கிய போது அவருக்கு வெறும் 11 வயதுதான்.

ஆனால், அவருக்கு 15 வயதான போது 2012 அக்டோபர் மாதம் பள்ளிப் பேருந்தில் ஏறிய அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகுதான் மலாலாவின் போராட்டம் உலகளவில் தலைப்பு செய்தியில் இடம்பிடித்தது.

மலாலாவின் உயிரை காப்பாற்ற உடனடி அவசர சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு அழைத்து செல்லப்பட்டார். அபாய கட்டத்திலிருந்து மீட்கப்பட்ட மலாலா அன்றிலிருந்து இன்றுவரை பிரிட்டனில்தான் படித்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம், அவருக்குமுன் பல லட்சக்கணக்கான பதின்ம வயதினரைப் போல, ட்விட்டரில் @Malala என்ற பெயரில் இணைந்து சமூக ஊடக உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் மலாலா.

பெண்களின் கல்விக்காக தன்னுடைய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மலாலா, தனது கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரிட்டனில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று மலாலாவிற்கு அவருடைய கல்லூரிப் படிப்பை படிக்க நிபந்தனைக்குட்பட்ட வாய்ப்பு ஒன்றை வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்