You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கங்கை, யமுனை நதிகள் வாழும் உயிர்களா? உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை
இந்தியாவின் புகழ்பெற்ற கங்கை மற்றும் யமுனை நதிகளை வாழும் உயிர்களாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றம் விதித்திருந்த ஓர் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மனிதர்களை போல இரு நதிகளுக்கும் அதே சட்ட அந்தஸ்து இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பு நதிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
இந்தியாவில் இந்த நதிகள் பொதுமக்களால் வணங்கப்பட்டாலும், பெரிதும் மாசுபட்டிருக்கின்றன.
உத்தராகண்ட் மாநில அரசு இப்பிரச்சனையை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு, சட்டப்படி ஏற்கக் கூடியது அல்ல என்று வாதிட்டது.
'கங்கை அன்னை' அல்லது கங்கை தாய் என இந்துக்களால் வணங்கப்படும் கங்கை நதி, இந்தியா முழுக்க உள்ள சுமார் 500 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. கங்கை மற்றும் அதன் கிளை நதி யமுனை இந்தியாவின் இருபெரும் நதிகளாகும்.
பிபிசியின் தெற்காசிய ஆசிரியர் ஜில் மெக்கிவரிங், இந்திய வாழ்வியலின் மையமாக இரு நதிகளும் போற்றப்படுவதாகவும், இந்திய கலச்சாரத்தில் மிகவும் கொண்டாடப்பட்டு தெய்வங்களாக வணங்கப்படுவதாகவும் கூறுகிறார்.
ஆனால், இரு நதிகளும் தொழிற்சாலை கழிவுகளாலும், சாக்கடை மற்றும் நதியின் கரைகளில் எரிக்கப்படும் சடலங்களின் மிச்ச மீதிகளாலும் கடுமையாக மாசடைந்துள்ளது.
மாசடைதலை தடுக்க இந்தியாவில் சட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானதாகவும் மற்றும் மோசமாக நடைமுறைப்படுத்தபடுவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எனவே கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மைல்கல் தீர்ப்பு நதிகளின் நிலைமையை மேம்படுத்தும் முயற்சில் தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு மிகவும் பிரபலமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், உத்தரகாண்ட் மாநில அரசு, இந்த தீர்ப்பு வெறுமனே வழங்கப்பட்டிருப்பதாகவும், நடைமுறைப்படுத்த முடியாது என்றும், சிக்கலான சட்ட சூழல்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்றும் வாதிட்டது.
மாநில அரசு முன்வைத்த வாதங்களை எடுத்து கொண்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பிற்கு தடைவிதிக்க ஒப்பு கொண்டது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்