You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க மாணவர் வார்ம்பியர் காலமானார்: கொடூரமான ஆட்சிமுறை என வடகொரியாவை விமர்சித்த டிரம்ப்
15 மாதங்களுக்கும் மேலாக வடகொரியாவில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க மாணவர் உயிரிழந்ததையடுத்து, `கொடூரமிக்க ஆட்சி முறை` வட கொரியாவில் நடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
22 வயதான ஓட்டோ வார்ம்பயரை, வட கொரியா கடந்த வாரம் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பியது. ஒரு வருடமாக அவர் கோமா நிலையில் இருந்ததால் மனிதாபிமான அடிப்படையில் அவரை அனுப்பியதாக வடகொரியா தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது.
வார்ம்பயர் மிக மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குப்பட்டுள்ளதாக அவரின் பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், ` வார்ம்பயர் மிக மோசமான சித்திரவதைகளை சந்தித்துள்ளதாகவும், இருப்பினும் குறைந்தபட்சமாக அவரின் பெற்றோருக்கு அவருடன் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதுமட்டுமல்லாமல், ` அடிப்படை மனித நாகரிகத்தை மதிக்காத இது போன்ற ஆட்சிமுறையால் அப்பாவி மக்கள் துயரங்களுக்கு உள்ளாவதை தடுக்க `` தனது நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
வட கொரியாவின் இத்தகைய கொடூர ஆட்சிமுறைக்கு அமெரிக்கா மீண்டும் மீண்டும் கண்டனம் தெரிவிப்பதுடன், சமீபத்தில் அந்நாட்டால் பாதிக்கப்பட்டவருக்காக தாங்கள் வருந்துவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய அதிபர் மூன்-ஜே-இன் இது குறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், வார்ம்பயரின் மரணத்திற்கு முழு முதற் பொறுப்பும் வடகொரியாவின் செயல்பாடுகள்தான் என்பது தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வார்ம்பயரின் பெற்றோர் ஃப்ரெட் மற்றும் சிண்டி இது குறித்து குறிப்பிடுகையில், `வடகொரியாவில் இருந்து தனது மகன் மீண்டு வந்தவுடன் சின்சினாட்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்திருந்தோம், ஆனால் அவர் பேசமுடியாமலும், பார்க்கமுடியாமலும் மிகவும் சிரமத்துடன் காணப்பட்டார். மிகவும் கலக்கத்துடன் காணப்பட்ட அவர் திங்கள் கிழமையன்று இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும், வடகொரியர்களால் தனது மகன் அனுபவித்த மிக மோசமான சித்திரவதைகளை காணும் போது இது போன்ற ஒரு துக்கமான நாளை நாங்கள் சந்தித்ததில்லை என்பதை சாத்தியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வார்ம்பயருக்கு வட கொரிய பயணத்தை ஏற்பாடு செய்துகொடுத்த சீன நிறுவனமான யங் பயனீர் டூர்ஸ், அமெரிக்க பயணிகளை இனிமேல் வட கொரியாவுக்கு அழைத்து செல்ல மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
கடுமையான நரம்பியல் நோய்
மார்ச் 2016-ல் வார்ம்பயரின் மீதான விசாரணை நிறைவுபெற்ற உடனே, பக்கவாதத்தை உருவாக்கும் Botulism என்ற ஒரு அரிய நோய் அவரை தாக்கியதாகவும், அதிலிருந்தே அவர் கோமா நிலையில் இருந்து வருவதாகவும் வட கொரியாவின் தரப்பு வாதமாக இருக்கிறது.
ஆனால், வார்ம்பயரை பரிசோதித்த சின்சினாட்டி மருத்துவர்கள், இந்த நோய் அவரை தாக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், வார்ம்பயர் கடுமையான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இது மூளையின் திசுக்கள் மோசமாக பாதிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளாதாகவும் அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய தருணத்தில் வார்ம்பயரால் தனது கண்களை திறக்க முடிந்தாலும், எந்தவித சைகைகளுக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை.
இளம் வயதான வார்ம்பயருக்கு ஏற்பட்ட மாரடைப்பு மூளைக்கு செல்லும் இரத்த விநியோகத்தை தடை செய்ததாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து சியோலில் உள்ள பிபிசி செய்தியாளர் ஸ்டீவ் இவன்ஸ் கூறுகையில், இந்த விடயத்தில் வடகொரியா சொல்வதை அப்படியே நம்பிவிட முடியாது என்று தெரிவித்தார்.
வார்ம்பியர் விவகாரம் இதுவரை:
30 டிசம்பர் 2015- பெய்ஜிங்கில் இருந்து பியோங்யாங்கிற்கு ஒரு சுற்றுலா குழுவுடன் வார்ம்பியர் சென்றார்.
2 ஜனவரி 2016- வடகொரியாவை விட்டு வெளியேறிச் செல்ல முயன்ற அவர், பியோங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். `விரோத செயலில்` ஈடுபட்டதால் வார்ம்பியரை பிடித்து வைத்துள்ளதாக அந்த மாதம் பின்னதாக, வட கொரியா அறிவித்தது.
16 மார்ச் 2016- பியோங்யாங்கில் நடந்த விசாரணையில் பிரச்சார பதாகையை திருடியதாக ஒப்புக்கொண்ட வார்ம்பியருக்கு, பதினைந்து ஆண்டுகள் கடின உழைப்பு தண்டனை வழங்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு வார்ம்பியர் கோமா நிலைக்கு சென்றதாக வட கொரியா கூறுகிறது.
2017 ஜூன் ஆரம்பத்தில்: வார்ம்பியரின் நிலை பற்றி அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அவரது பெற்றோர்களுக்குத் தகவல் தரப்பட்டது.
13 ஜூன் 2017- வட கொரியாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர், மருத்துவ வசதிகளுடன் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அவர் கடுமையான மூளை காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
19 ஜூன் 2017- வார்ம்பியர் மரணமடைந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்