You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பை விழுங்கிய தீ: பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை12 பேர் பலியாகியிருப்பதாகபோலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தீ சம்பவத்தி்ல் காயமடைந்த 65-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
அந்த கட்டடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இதோபோன்ற நிலையில் உள்ள மற்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் சோதனை நடத்தப்படும் என காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை அமைச்சர் நிக் ஹர்ட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மேற்கு லண்டனில் அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டடத்தில் தீப் பிடித்து, மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
லண்டனில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் பெரிதாக பரவிய இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ பிடித்த நேரத்தில், பல நூற்றுக்கணக்கானோர் அந்தக் கட்டடத்தில் இருந்ததாகவும், பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது.
எரிந்துகொண்டிருக்கும் கட்டடத்திலிருந்து எரிந்து-அணையும் ஒளியைக் கண்டதாகவும், அது ( கட்டடத்தில் சிக்கியவர்களின்) கைவிளக்கு (டார்ச்) வெளிச்சம் என்று நம்பியதாகவும், இக்குடியிருப்பு முழுவதுமாக பற்றி எரியும் நிலையில் இருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
''நான் சாம்பலில் மூடப்பட்டு இருக்கிறேன், அந்த சம்பவம் அவ்வளவு மோசமாக உள்ளது,'' என்று சேனல் 4 டிவி நிகழ்ச்சியின் அமேசிங் ஸ்பேஸின் தொகுப்பாளர் ஜார்ஜ் கிளார்க், ரேடியோ5க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
''நான் ஒரு 100 மீட்டர் தூரத்தில் உள்ளேன். நான் முழுவதுமாக சாம்பலால் மூடப்பட்டு உள்ளேன்,'' என்றார் அவர்.
''அந்த கட்டடம் முழுவதுமாக எரிந்துள்ளது,'' என்று சம்பவத்தை நேரில் பார்த்த டிம் டௌனி என்ற மற்றொருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
''அந்த கட்டடம் முற்றிலும் எரிந்துபோய்விட்டது,'' என்றார் அவர்.
''நான் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை. எத்தனை பெரிய சம்பவம். முழு கட்டடமும் நொறுங்கிப் போகிறது. கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியாகிறது,'' என்றார் டௌனி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்