கொள்ளையில் பணம் பறிகொடுத்த முதியவருக்காக குவிந்த நன்கொடை: அசத்திய நெட்டிசன்கள்

இந்தோனீஷியாவில், கொள்ளையர்களிடம் பணத்தைப் பறிகொடுத்த, பழம் விற்கும் முதியவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர்.

94 வயதாகும் சூரத்மானை ஓட்டுநர் ஒருவர் நெருங்கி வந்து அவரது வாகனத்தில் நுழைந்து பழங்களை விற்குமாறு கேட்டார்.

வாகனத்தின் உள்ளே ஏறியவுடன் இரண்டு பேர் அவர் பாக்கெட்டில் இருந்த சுமார் ஒரு மிலியன் ருபையா பணத்தைப் பி்டுங்கிக் கொண்டனர். ( ஒரு மிலியன் இந்தோனீஷிய ருபையா என்பது சுமார் 80 அமெரிக்க டாலர்கள் ).

பிறகு வண்டியிலிருந்து அவரை அவர்கள் கீழே தள்ளிவிட்டனர்.

டாமி ரெசா என்னும் நபர், சூரத்மான் கவலையுடன் இருப்பது போன்ற வீடியோவொன்றை இணையத்தில் பதிவிட்டார்; அதனை பார்த்து அந்த பழம் விற்கும் முதியவருக்காக பரிவும் பச்சாதாபமும் குவிந்துள்ளது.

இந்த மாதத்தின் இறுதியில் வரும் ஈத்-அல்-அதா திருவிழாவிற்காக, புதிய நாற்காலிகளை வாங்க, அந்த பணத்தை வைத்திருந்ததாக சூரத்மான் கூறியதாக ரெசா தெரிவித்தார்.

சுமத்ரா தீவில் உள்ள ஜாம்பி மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது. சூரத்மானை கண்ணீருடன் பார்த்ததாக டாமி ரெசா பிபிசியிடம் தெரிவித்தார்.

"சூரத்மான் உதவிக்காக கத்தியபோது நான் அந்த இடத்தில் இருந்தேன்" எனவும் அவர் தெரிவித்தார்.

தான் பார்த்த நிகழ்வை முகநூலில் பதிவிட்டுள்ளார் ரெசா. இதை கண்ட சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் உதவ முன் வந்துள்ளனர்; எனவே அதன் மூலம் சூரத்மானின் பணத்தை திரும்ப கொடுப்பதற்காக நன்கொடை சேகரிக்கலாம் என ரெசா முடிவு செய்துள்ளார்.

"ஜாம்பி போன்ற இடங்களிலிருந்தும், ஹாங் காங் மலேஷியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பலர் நன்கொடை வேண்டுமா என கேட்கின்றனர்.

பலர் இது குறித்த தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் பதிவு செய்துள்ளனர்.

"இது எந்த வகையிலும் மிக அருவருக்கத்தக்க செயல்" என காலிஸ்டா பிரிமாலியா என்பவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

"முதலில் வாழ்வதற்காக சிரமப்பட்டு சம்பாதிக்கும் முதியவரை நீங்கள் பிடித்ததிலிருந்து உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிகிறது.

ரமலான் மாதத்தில் இம்மாதிரியான ஒரு தீங்கான செயலை மனம் உள்ள எவரும் செய்ய மாட்டார்கள். இதை செய்தவர்களை எண்ணி அவமானப்படுகிறேன்" என ஒரு சமூக ஊடக பயன்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"அந்த முதியவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு நான் அழுது விட்டேன். நமது நாடு இவ்வளவு கீழ் இறங்கிவிட்டதா?

அதிகாரிகள் உடனடியாக அக்கயவர்களை பிடிக்க வேண்டும்" என முகநூல்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரெசாவின் முகநூல் பதிவு வைரலாகி, சூரட்மானிற்கு 37 மில்லியன் ரூபையாவை சேகரித்து கொடுத்துள்ளது.

உள்ளூர் ஆளுநர் அவருக்கு 5 மில்லியன் ரூபையாவை தானமாக கொடுத்து, அவரிடம் மிஞ்சியிருந்த வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டார்.

முகநூலில் இதை பதிவிட்டிருந்த ரெசா சூரத்மானிடம் பணத்தை கொடுத்த போது எடுத்த புகைப்படத்தையும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

"அவர் என்னிடம் மிகவும் நன்றியுடன் நடந்து கொண்டார்; நான் ஒரு தூதுவன்தான் என அவரிடம் தெரிவித்தேன்" என ரெசா தெரிவித்தார்.

இந்தோனீஷிய மக்கள் மிகவும் அற்புதமானவர்கள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரிவைக் கண்டு வியந்து விட்டேன் என ரெசா தெரிவித்துள்ளார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்