You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
60 டெஸ்ட் ட்யூப் குழந்தைகளுக்கு தந்தை யார்? மருத்துவரா ?
ஹாலந்து நாட்டில், சமீபத்தில் இறந்துபோன ஒரு செயற்கை கருத்தரிப்பு மைய மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்காக வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு தனது சொந்த விந்தணுக்களை செலுத்தி கர்ப்பம் தரிக்கவைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை அடுத்துஅவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட உடமைகள் மீது டி.என்.ஏ சோதனை நடத்த வேண்டும் என்ற அக்குடும்பங்களின் கோரிக்கைக்கு, நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஜான் கார்பாத் என்ற அந்த மருத்துவர் ராட்டர்டாம் அருகே பிஜ்தார்ப் என்ற மையத்தை நடத்தி வந்த அவர், சுமார் 60 குழந்தைகள் உருவாவதற்கு அவரே காரணமாக இருந்துள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தனது 89 வயதில் இறந்து போன ஜான் கார்பாத்தின் இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை கொண்டு சோதனை நடத்தப்படும்.
அந்த மருத்துவரின் குடும்பத்திற்காக வாதாடும் வழக்கறிஞர் இந்தக் கூற்றுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒரே மாதிரியான தோற்றம்
''செயற்கை கருத்தரிப்பு துறையின் முன்னோடி'' என்று தன்னை அழைத்துக்கொண்டவர் ஜான் கார்பாத்.
அவர் தகவல்களைத் திரித்ததாகவும், பகுப்பாய்வு மற்றும் கொடையாளிகள் பற்றிய விவரங்களையும் போலியாக எழுதியதாகவும், செயற்கை கருத்தரிப்பில், நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு கொடையாளரின் மூலம் ஆறு குழந்தைகளை மட்டுமே உருவாக்கவேண்டும் என்ற விதியை மீறியதாகவும் எழுந்த புகார்களை அடுத்து 2009ல் அவரது மருத்துவமனை மூடப்பட்டது.
கடந்த மாதம் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் 22 பெற்றோர்களின் வழக்கறிஞர் சில விவரங்களை தெரிவித்தார்.
அவர் தன்னிடம் உள்ள வழக்குகளில், ஒரு நபர், தனது குழந்தை உருவாக்க விந்தணு தந்த கொடையாளரின் கண்கள் நீல நிறத்தில் இருந்ததாகவும், ஆனால் அவருக்கு பிறந்த குழந்தையின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருப்பதாகக் கூறினார் என்றும் மற்றொரு நபர், அவரது மகன் மருத்துவரைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இறந்த மருத்துவர் ஜான் கார்பாத்தான் தங்களுடைய தந்தை என்று நம்பும் குழந்தைகள் அதற்கான காரணங்களை வெளிப்படுத்துவது வரை, டி என் ஏ விவரங்கள் வெளியிடப்படாது என்று ராட்டர்டாம் மாவட்ட நீதிமன்றத்தில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர் அன்னா ஹாலிகன் தெரிவித்தார்.
இந்த மருத்துவரின் டி.என்.ஏ விவரங்கள், குழந்தைகள் அந்த மருத்துவர்தான் தங்களின் தந்தை என்று நம்ப இடமிருக்கிறது என்பதை காட்டும் வரை, சீலிடப்பட்டிருக்கும் என்று ராட்டர்டாம் மாவட்டநீதிமன்றத்தில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர் அன்னா ஹாலிகன் தெரிவித்தார்.
இந்த டி.என்.ஏ விவரங்கள் ஒத்துப்போனால், 1980களில் பெரும்பாலும் பிறந்த இந்தக் குழந்தைகள் அந்த மருத்துவர் மீது வழக்கு தொடர முடியும்.
''இந்த வழக்கு எனக்கு எல்லா விதங்களிலும் முக்கியமானது. இதற்கான பதில்களை நாங்கள் பெறுவோம் என்று நம்புகிறோம்,'' என்று ஜான் கார்பாத் தன்னுடைய தந்தையாக இருக்கக்கூடும் என்று நம்பும் ஜோயி தெரிவித்தார்.
அதே சமயம், டி என் ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கார்பாத் குடும்பத்தின் வழக்கறிஞர்.
உயிருடன் இருந்தபோது, மருத்துவர் கார்பாத்தும் இந்த சோதனையை மறுத்து வந்தார் .
ஆனால், கடந்த மாதம், ஜான் கார்பாத்தின் மகன் சோதனைக்காக தனது டி.என்.ஏ வை அளித்தார்.
அந்த சோதனைகள் , செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த 19 குழந்தைகளுக்கு மருத்துவர் கார்பாத் தந்தையாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டின என்று ஏ ஃஎப் பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நீதிமன்ற வழக்கில் அந்த 19 வழக்குகளும் சம்பந்தப்பட்டுள்ளனவா என்று தெளிவாகத் தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்