You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீவிரவாதத்தை விரட்டியடிக்க முஸ்லிம் நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்
தீவிரவாதத்தை விரட்டியடிப்பதில் முஸ்லிம் நாடுகள் முன்னின்று செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக செளதி சென்றுள்ள அவர், ரியாத்தில், முஸ்லிம் நாடுகளின் 55 பிராந்தியத் தலைவர்கள் கூட்டத்தில் பேசும்போது இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, முஸ்லிம் நாடுகளை வெறுப்புக்கு உள்ளாக்கும் வகையில் பேசிய அவர், தற்போது அவர்களுடன் ஓர் இணக்கமான உறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
புதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாகக் கூறிய அவர், இது மாறுபட்ட மதங்களுக்கிடையிலான போர் அல்ல என்றும், நன்மைக்கும் தீமைக்குமான யுத்தம் என்றும் வர்ணித்தார்.
முஸ்லிம் நாடுகள் தீவிரவாதத்தை விரட்டியடிப்பதில்தான் வளமான எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்றும், அமெரிக்கா செயல்பட வேண்டும் என காத்திருக்காமல், ஒவ்வொரு நாடும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வழக்கான, ஆத்திரமூட்டும் பேச்சாக இல்லாமல் டிரம்பின் உரை மாறுபட்டிருந்தது. செளதி அரேபியாவின் முக்கிய எதிராளியான ஈரானை கண்டித்ததன் மூலம், பல வளைகுடா முஸ்லிம் தலைவர்களின் மனங்களைக் குளிர வைத்திருக்கிறார்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவைப் போல, மனித உரிமை, ஜனநாயகம் பற்றிப் பேசவில்லை. ஆனால், பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை டிரம்ப் கண்டித்தார்.
அவரது பேச்சுக்கு அந்தப் பிராந்தியத்தில், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் வந்துள்ளன.
டிரம்ப் ஆதரிக்கும் செளதி அரேபியாவில், பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது, வாக்களிக்க உரிமையில்லை என்றும், அவர் எதிரியாக சித்தரிக்கும் ஈரானில் பெண்கள் வாகனம் ஓட்டவும் வாக்களிக்கவும் உரிமை உண்டு என்று கருத்துக்கள் பரவி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்