You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐக்கிய அரபு எமிரேட்டில் சிகிச்சை பெறும் 'பருமனான பெண்'
உலகிலேயே அதிக எடையுடையவராக கருதப்பட்ட எகிப்து பெண்ணுக்கு அபுதாபி மருத்துவமனையில் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கான சிகிச்சை வழங்கப்படுகிறது.
500 கிலோ (1,102lb) எடையுடையவராக கூறப்பட்ட இமான் அப்ட் எல் அடி, மும்பை மருத்துமனையில் பெற்ற சிகிச்சையால், 250 கிலோவுக்கு அதிகமான எடையைக் குறைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று அவர் இந்தியாவில் இருந்து கிளம்பிச் சென்றார்.
உடல் பருமனைத் தவிர, "இதயக் கோளாறு" மற்றும் படுக்கைப் புண்ணாலும் இமான் அப்ட் எல் அடி பாதிக்கப்பட்டிருப்பதாக அபுதாபி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அண்மை வாரங்களில், மும்பை மருத்துவமனைக்கும், இமான் அப்ட் எல் அடியின் குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தியாவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த கடைசி நாட்களில், இமானின் சகோதரி ஷாய்மா செலிம் சர்ச்சையை கிளப்பினார்.
சமூக ஊடகங்களில் காணொளி பதிவு ஒன்றை வெளியிட்ட செலிம், மும்பை மருத்துவமனை கூறுவதுபோல தன்னுடைய சகோதரி பெரியளவில் உடல் எடையை இழக்கவில்லை என்று குறைகூறியிருந்தார். மேலும் தன்னுடைய சகோதரி பேசவோ, நகரவோ முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை மருத்துவமனை வன்மையாக கண்டிருந்திருந்தது.
தற்போது இமான் அப்ட் எல் அடிக்கு இருபது மருத்துவர்கள் கொண்ட பல்துறை மருத்துவக் குழு சிகிச்சை வழங்கிவருவதாக, அபுதாபியின் புர்ஜீல் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
"பல்வேறு மருத்துவ கோளாறுகளை எதிர்கொண்டிருக்கும் இமான் அப்ட் எல் அடிக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது, கடுமையான யுரோசெப்சிஸ் ((Urosepsis) (பாக்டீரியாவால் ஏற்படும் சிறுநீரகத் தொற்று)) மற்றும் படுக்கைப் புண்களால் தீவிரமாக (மூன்றாம் நிலை) பாதிக்கப்பட்டுள்ளார்".
இமான் அப்ட் எல் அடியின் உடல்நிலையை சீராக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறும் அந்த அறிக்கை, "இது மருத்துவமனையின் தற்போதைய நிலவரம்தான். குறைந்தபட்சம் இமான் எந்த உதவியும் இல்லாமல் உட்கார முடியும் அளவுக்கு அவரை குணப்படுத்திவிடுவோம்" என்று கூறுகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்ட ஏர்பஸ் விமானத்தின் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட இமான் அப்ட் எல் அடிக்கு எடை குறைப்பிற்கான சிறப்பு திரவ உணவு கொடுக்கப்பட்டது, பிறகு எடைக் குறைப்பு அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்றால் என்ன?
பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை எனப்படும் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை, அபரிமிதமான உடல் எடை கொண்டவர்கள் மற்றும் அதிக அளவு உடல் கொழுப்பு உள்ளவர்களுக்கு வேறு எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் போகும்போது கடைசியாக மேற்கொள்ளப்படுவது.
பொதுவான இரண்டு எடைக் குறைப்பு அறுவை சிகிச்சைகள்:
இரைப்பை பட்டை சிகிச்சை: பட்டை போன்ற வடிவத்தால் இரைப்பையின் அளவு குறைக்கப்பட்டு, சிறிதளவு உணவு உட்கொண்டதுமே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும்.
இரைப்பை அறுவை சிகிச்சை: வயிற்றின் ஜீரண அமைப்பு திருத்தி அமைக்கப்பட்டு, குறைந்த அளவு உணவு உட்கொண்டதுமே வயிறு நிரம்பிய உணர்வை தரும் சிகிச்சை.
காணொளி: 500ல் இருந்து 250கிலோவாக எடையை குறித்த எகிப்திய பெண்மணி
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்