You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நைஜீரியா : போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிபோக் சிறுமிகளில் 82 பேர் விடுதலை
வட கிழக்கு நைஜீரியாவில் மூன்றாண்டுகளுக்குமுன் 276 பள்ளி சிறுமிகள் கடத்தப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 82 பேரை போகோ ஹராம் குழுவை சேர்ந்த இஸ்லாமியவாத தீவிரவாதிகள் விடுவித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பரிமாற்றம் மூலம் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக பள்ளி சிறுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட சிறுமிகளை இன்று(ஞாயிறு) அதிபர் முகமது புஹாரி அபுஜாவில் வரவேற்பார் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.
சிபோக் சிறுமிகள் என்றழைக்கப்படும் பெண்களின் கடத்தல் விவகாரம் உலகளவில் கண்டனங்களை எழுப்பியது மட்டுமின்றி, பெரிய சமூக ஊடக பிரசாரத்தையும் தூண்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த சமீபத்திய விடுவிப்பு சம்பவத்திற்குமுன், கடத்தப்பட்ட 276 பேரில் சுமார் 195 பேர் காணமால் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போகோ ஹராம் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் என்ற எண்ணிக்கை அதிகாரிகளால் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட 82 சிறுமிகளும் நைஜீரிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும், சிறுமிகள் தொலைத்தூர பகுதியிலிருந்து கேமரூன் உடனான எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாங்கி அருகே இருக்கும் ராணுவ தளத்திற்கு சாலை வழியாக வாகன தொடரணி மூலம் கொண்டு வரப்பட்டனர் என்றும் லாகோஸில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்