You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொலம்பியா நிலச்சரிவில் 254 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்
கொலம்பியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 254 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் காணாமல் போனவர்களை தேடிவருவதாக கொலம்பியாவின் பாதுகாபுப் படைகள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணியில் 1,100 சிப்பாய்கள் மற்றும் போலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நாட்டின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் மொகாவா நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குடியிருப்பு பகுதிகள், மண் மற்றும் பாறைகளுக்கு அடியில் மூழ்கின; எனவே வீடுகளிலிருந்து தப்பித்துச் செல்லும் கட்டாய நிலைக்கு அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் தள்ளப்பட்டனர்.
பிற செய்திகள்
புட்டுமாயோ மாகாண தலைநகரில் குறைந்தது 400 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 200 பேரை காணவில்லை என்றும் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவின் செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்களும் அந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200க்கும் மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருவதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உதவிக் குழுக்கள் தெரிவித்தனர்
பாதிக்கப்பட்ட நகரில் எடுக்கப்பட்ட காணொளி, குடும்ப நல மையத்தில், காணாமல் போன குழந்தைகள் மற்றும் அவர்களின் வயது ஆகியவை குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு குறித்து குடியிருப்புவாசிகள் அழுவது மாதிரியான காட்சியை காட்டுகிறது.
"நாங்கள் எங்கள் குழந்தையை தொலைத்துவிட்டோம் குழந்தையை காணவில்லை பிறவற்றை நீங்களே பார்க்க முடியும்" என குடியிருப்புவாசி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிபர் ஜுவான் மானுவெல் சான்டோஸ் பாதிக்கப்பட்ட மாநிலத்தில், அவசர நிலையை அறிவித்துள்ளார்; மேலும் மீட்பு பணிகளை மேற்பார்வையிட விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
"பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவியையும் செய்வோம் இந்தச் சம்பவம் என் இதயத்தை நொறுக்கிவிட்டது" என அவர் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணி தொடருவதால், கொலம்பிய விமானப் படை, உபகரணங்கள், குடிநீர் மற்றும் மருந்துகளை அந்த பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் விமானத்தின் மூலம் மீட்கப்படுவது விமான படையால் சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்றில் தெரிகிறது.
"எங்கள் கதாநாயகர்கள் விபத்து ஏற்பட்ட பகுதியில் அவசர நிலை முடியும் வரை இருப்பார்கள்" என ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்