எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை ; இளவரசர் ஹாரியின் நெகிழ்ச்சி பயணம்

ராஜ குடும்ப பங்களிப்புகளில் இனிமேலும் கட்டுண்டு கிடக்க விரும்பவில்லை என்றும் தன்னுடைய வாழ்வில் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய விரும்புவதாகவும் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.

ஐடிவி ஆவணப்படத்தில் லெசோடோவில் மேற்கொள்ளும் சமூக சேவைகள் குறித்து பேசிய ஹாரி, சிறுவயதில் தன்னுடைய தாயை இழந்தது தன்னுடைய நிலைகுறித்து கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

முன்பு, தான் வெளியுலகிற்கு பயந்து ஒளிந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் தற்போது தன்னுடைய வாழ்க்கையை வேறு விதமாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எச்.ஐ.வி எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இளம் தலைமுறையினருக்கு உதவி செய்யும் நோக்கில் லெசோட்டோவின் இளவரசர் செய்சோ உடன் இணைந்து இளவரசர் ஹாரி சென்டிபாலி என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.

32 வயதான இளவரசர் அந்த நிகழ்ச்சியில், என்னுடைய வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார்.

''ஆனால் நான் தற்போது மிகவும் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நிலையில் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்''

2006 ஆம் ஆண்டு சென்டிபாலி தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டது முதல் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கு எச் ஐ வி சோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

நல்லவராக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றும், தீயவராக இருப்பது சலித்துவிட்டதாகவும் இளவரசர் கூறியுள்ளார்.

''நீங்கள் என்னைப் போன்று இருந்தாலும், சராசரி ஜோவை போன்று இருந்தாலும் அல்லது நீங்கள் யாராக இருந்தாலும் நீங்கள் அரசியலை மற்றும் உலகில் உள்ள பெரிய விஷயங்களில் தாக்கத்தைஏற்படுத்த முடியாது என்றால் உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள் '' என்றார்.

''அது உங்கள் உள்ளூர் சமூகங்கள் ஆகட்டும், உங்கள் கிராமமாகட்டும், உங்கள் உள்ளூர் தேவாலயமாகட்டும், தெருவில் இறங்கி நடந்து செல்வது, , வயதான பெண்மணிக்கு கதவை திறந்துவிடுவது, சாலையை கடக்க உதவி செய்வது''

''எதுவாக இருந்தாலும் சரி, நல்லதையே செய்ய வேண்டும். ஏன் நீங்கள் செய்யமாட்டீர்களா ? ''கேட்கிறார் ஹாரி.