துருக்கி: பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறுமியை திருமணம் செய்தால் மன்னிப்பு

சிறுமியரோடு பாலியில் வல்லுறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்படுவோர், அந்த பெண்ணையே திருமணம் செய்வதாக இருந்தால், வழக்கின்றி விடுவிப்பதற்கு அனுமதி வழங்கும் மசோதா ஒன்றுக்கு துருக்கியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சட்டப்பூர்வமற்ற முறையில் பாலுறவு கொள்வதை உணராமல் செயல்படுவோருக்கு ஒருமுறை வழங்கப்படும் மன்னிப்பு இது என்று அரசு கூறுகிறது.

கடந்த தசாப்தத்தில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த மசோதா துருக்கியில் பாலியல் வல்லுறவை சட்டப்பூர்வமாக்கும் என்று விமசகர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் எப்போதும் தாழ்ந்தே இருக்க வேண்டும் என்பதற்கு இந்த மசோதா ஊக்கமூட்டுவதாக அதிபர் ரெசீப் தையிப் எர்துவானின் இஸ்லாமியவாத அரசை அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.