ஆஸ்திரேலியாவில், ஒருபால் உறவு திருமணத்தை அனுமதிப்பது குறித்து பொது வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

ஆஸ்திரேலியா அரசு ஒரு பால் உறவு திருமணத்தை அனுமதிப்பது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த முன்வைத்துள்ள திட்டத்தை ஆஸ்திரேலியாவின் முக்கிய எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி தடுத்துள்ளது.

இந்த விவகாரம் வெகு விரைவாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் தீர்க்கப்படவேண்டும் என்று அக்கட்சி கூறுகிறது.

தொழிலாளர் கட்சி ஒரு பால் உறவு திருமணத்தை ஆதரிக்கின்றது. ஆனால் அந்தக் கட்சியின் தலைவர், பில் ஷார்ட்டென், பொது வாக்கெடுப்பு நீண்ட மற்றும் பிளவை தூண்டும் விவாதத்தை ஏற்படுத்தும். மற்றும் இது ஒரு பால் உறவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அரசு பிப்ரவரி மாதம் பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு சட்ட மசோதாவைக் கொண்டுவந்தது.

ஆனால் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் அவையில் தொழிலாளர் கட்சியின் ஆதரவை அது சார்ந்திருக்கிறது.

அட்டர்னி ஜெனரல், ஜார்ஜ் ப்ரண்டிஸ், தொழிலாளர் கட்சி அரசியல் லாபம் பெறுவதற்காக இதைச் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.