You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்கத்தை விலை மலிவாக வாங்க முடியுமா? தங்கத்தில் எப்படி அதிக லாபம் பார்ப்பது?
- எழுதியவர், கெளதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஒரு தனி காதல் இருந்து வருகிறது. ஒருவரின் சமூக அந்தஸ்தை காட்டும் உலோகமாக, அவசர நிதி தேவைகளுக்கு உதவும் நண்பனாக, தங்கம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அப்பேற்பட்ட தங்கத்தை லாபகரமாக வாங்குவது எப்படி? என விளக்குகிறார் முதலீட்டு ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பன்.
"தங்கம் வாங்குவதற்கு முன் அதை எதற்கு வாங்கப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். முதலீட்டுக்காக வாங்குகிறோமா அல்லது ஆபரணத்துக்காகவா என முடிவு செய்து கொள்ளுங்கள்.
இதில் ஆபரணத்துக்காக நகை வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் வழக்கம் போல உங்களுக்கு நல்ல உறவுமுறை உள்ள பழங்கால கடைகளிலோ அல்லது சற்று பெரிய நிறுவனங்களிலோ வாங்கிக் கொள்ளலாம்.
அதிக வேலைபாடு இல்லாத நகைகளாக வாங்குவது, செய்கூலி மற்றும் சேதாரத்தைக் குறைக்க உதவும். அதே போல விற்கும் போதும் ஓரளவுக்கு நல்லவிலை போகும்.
முதலீட்டுக்காக வாங்கப் போகிறீர்கள் என்றால் ஆபரணத் தங்கத்தை தவிர்ப்பது நல்லது" என்கிறார் சொக்கலிங்கம்.
ஏன்? எனக்கேட்டால், ஆபரணத் தங்கத்தில் செலவு அதிகம் என்கிறார்.
"3 சதவீதம் ஜிஎஸ்டி வரி, 5 - 10 சதவீதம் வரை செய்கூலி, சுமார் 30 சதவீதம் வரை சேதாரம், இறக்குமதி வரி என ஆபரணத் தங்கத்தில் பல்வேறு கூடுதல் செலவுகள் இருக்கின்றன.
ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றால் தானே லாபம் அதிகரிக்கும். ஆபரணத் தங்கத்தில் மேலே குறிப்பிட்ட செலவுகள் இருப்பதால், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தால் கூட லாபம் குறையும்.
இந்த செலவுகள் ஏதுமின்றி சாவரின் தங்க பத்திரத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்கலாம்." என்கிறார் சொக்கலிங்கம்.
சாவரின் தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond)
"இந்திய அரசு சார்பாக மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் பத்திரம் இது. அதிகபட்சமாக எட்டு ஆண்டுகள் வரை சாவரின் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
நன்மைகள்
1. ஆபரணத் தங்கத்தைப் போல தேய்மானம் கிடையாது.
2. ஆண்டுக்கு 2.5 % வட்டி கிடைக்கும்.
3. தங்கத்தின் விலை ஏற்றத்தை சாவரின் பத்திரங்கள் அப்படியே பிரதிபலிக்கும்.
4. தேவைப்பட்டால் இந்த தங்க பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து கடன் பெறலாம்.
5. இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்து எட்டு ஆண்டுகள் கழித்து விற்றால் மூல தன ஆதாய வரி (Capital Gain Tax) கிடையாது. இந்த வரிச் சலுகை வேறு எந்த தங்க இடிஎஃப், தங்க ஃபண்டுகள், தங்க நகைகளுக்கும் இந்த வசதி கிடையாது என்பது மிக முக்கிய சிறப்பம்சம்.
6. ஆபரணத் தங்க நகைகளைப் போல திருடு போகும் என்கிற பயமின்றி இருக்கலாம். தங்க பத்திரத்தை யாராவது திருடிச் சென்றாலும், அவர்களால், அதை பணமாக்க முடியாது.
7. தனி நபர்கள், HUF எனப்படும் இந்து கூட்டுக் குடும்பத்தினர், ட்ரஸ்டுகள், பல்கலைக்கழகங்கள் தங்க பத்திரங்களை வாங்கலாம்.
8. தனி நபர்கள் தங்களின் குழந்தைகள் பெயரிலும் வாங்கலாம். தனி நபர்கள் கணவன் மனைவியாகச் சேர்ந்தும் (Joint Holder) வாங்கலாம். குறிப்பாக மைனர்கள் பெயரில் கார்டியன்களும் வாங்கலாம்.
9. தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், ஆன்லைன் பேங்கிங் முறையிலேயே விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில், வங்கி கேட்கும் சில அடிப்படை விவரங்களைக் கொடுத்து, ஆன்லைனிலேயே பணத்தைச் செலுத்தி விண்ணப்பித்தால் போதும். தங்க பாண்டுகள் ஒதுக்கீடு ஆன பின் வங்கிகளில் இருந்து Physical / E Certificate பெற்றுக் கொள்ளலாம். இதை டீமேட் கணக்கில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
10. சாவரின் தங்க பத்திரத்தில் தனி நபர்கள் 1 கிராம் தொடங்கி அதிகபட்சமாக ஒரு நிதி ஆண்டில் 4,000 கிராம் வரை முதலீடு செய்யலாம்.
11. டீமேட் கணக்கு மூலம் வாங்கப்படும் தங்க பத்திரங்களை எப்போது வேண்டுமானாலும் விற்று வெளியேறலாம்" என பல நன்மைகளை அடுக்குகிறார் சொக்கலிங்கம்.
குறைந்த செலவில் தங்கம் வாங்கி அதிக லாபம் பார்க்க இது சிறந்த வழி என்கிறார் அவர்.
தங்க இடிஎஃப் ஃபண்டுகள்
"தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய முடியவில்லை எனில் தங்க இடிஎஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதிலும் ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம், தேய்மானம் போன்ற செலவுகள் கிடையாது.
இந்த ஃபண்டுகளைக் கூட வங்கியில் அடகு வைத்து கடன் பெறலாம். தங்கத்துக்கான விலை ஏற்றம், இந்த ஃபண்டுகளிலும் பிரதிபலிக்கும்.
ஒப்பீட்டளவில் பார்த்தால் தங்க இடிஎஃப் ஃபண்டுகளை விட சாவரின் தங்க பதக்கங்களில் 2.5 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும். மேலும் தங்க ஃபண்டுகளை விற்று வெளியேறும் போது மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டி இருக்கும்" என்கிறார் நிதி ஆலோசகர் சொக்கலிங்கம்.
ஒரு குடும்பம் எவ்வளவு ஆபரணத் தங்கம் வைத்துக் கொள்ளலாம்?
"இன்று கல்வியறிவு பரவலாகி வருகிறது. படித்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் கணிசமாக குறைந்திருக்கிறது. சமூக அமைப்பிலும் தங்கம் தொடர்பான பார்வை சற்றே மாறத் தொடங்கி இருக்கிறது. எனவே ஒரு நடுத்தர குடும்பம் 300 - 400 கிராம் தங்கம் வைத்திருந்தால் போதுமானது என நான் கருதுகிறேன்" என்கிறார்
தங்கம் ஒரு நல்ல முதலீடா? தங்கத்தில் முதலீடு செய்வதால் என்ன நன்மை?
"தங்கம் ஓரளவுக்கு நிலையான வருமானத்தைக் கொடுக்கும் முதலீடு அவ்வளவு தான்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தங்க ஃபண்டுகள், ஆண்டுக்கு சுமார் 15 சதவீதம் வருமானம் கொடுத்திருக்கின்றன. ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு சுமார் 7 சதவீதம் மட்டுமே வருமானம் கொடுத்திருக்கின்றன.
ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களைக் கொண்ட லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் 10 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 13 சதவீதம் வருமானம் கொடுத்திருக்கின்றன. ஐந்து ஆண்டுகளில் கூட ஆண்டுக்கு சுமார் 14 சதவீதம் வருமானம் கொடுத்திருக்கின்றன. எனவே தங்கத்தை மிக சிறப்பான முதலீடாகக் கருத முடியாது.
ஆனால், ஒருவரின் முதலீட்டை பரவலாக்கி நஷ்டத்தைக் குறைக்க தங்கம் உதவும். பங்குச் சந்தைகள் சிறப்பாக செயல்படாத போது தங்கம் சிறப்பாக செயல்படும். அது போன்ற சமயங்களில் தங்க முதலீடு கைகொடுக்கும். எனவே ஒருவரின் ஒட்டுமொத்த முதலீட்டில் ஒரு கணிசமான பகுதி மட்டும் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது" என்கிறார் சொக்கலிங்கம்.
பிற செய்திகள்:
- சீனாவில் வணிக நிறுவனங்கள் மீதான நடவடிக்கை நீண்டகாலம் தொடரும்
- ஆயிரக்கணக்கான வௌவால்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கான காரணம் என்ன? – வியக்க வைக்கும் குடும்பம்
- கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் எல். முருகனின் 'ஆசீர்வாத யாத்திரை' - பாஜகவின் திட்டம் என்ன?
- ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைக் கடித்த மேயர்: புது பதக்கம் தருகிறது ஒலிம்பிக் கமிட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்