இந்த கோழி நீல நிற முட்டையிட்டதன் ரகசியம் என்ன?

கோழி நீல நிற முட்டை முட்டையிட்டது ஏன்?

பட மூலாதாரம், SYED NOOR

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

ஒரு வீட்டில் குழந்தை பிறப்புக்காக காத்திருக்கும் உறவினர்களை போல, ஒரு கோழி முட்டையிடுவதற்காக கர்நாடகாவில் கால்நடை மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். இப்படி காத்திருப்பது விநோதமாக இருக்கலாம், ஆனால் இந்த கோழியும் விநோதமானது தான்.

'இந்த கோழி நீல நிற முட்டையிட்ட போது ஆச்சர்யப்பட்டேன்' என்கிறார் அதன் உரிமையாளரான சையத் நூர்.

ஆம் நீல நிற முட்டை.

கட்டிடத் தொழிலாளியான சையத் நூர், "இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறிய கோழியை வாங்கினேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அது வெள்ளை நிற முட்டையிட்டு வந்தது. கடந்த சனிக்கிழமையும் வெள்ளை நிற முட்டை தான் இட்டது. ஆனால் திங்கட்கிழமை நீல நிற முட்டையிட்டது." என்று கூறினார்.

அசீல் இனத்தை ( ஆசிய இனம்) சேர்ந்த கோழிகள் பொதுவாக 10 நாட்கள் தொடர்ந்து முட்டையிடும். அதன் பிறகு 15 நாட்களுக்கு முட்டையிடாது.

ஆனால் சையத் நூர் தனது கோழி இரண்டு ஆண்டுகளாக தினமும் முட்டையிட்டதாக கூறுகிறார்.

கோழி நீல நிற முட்டை முட்டையிட்டது ஏன்?

பட மூலாதாரம், SYED NOOR

நீல நிற முட்டைப் பற்றிய செய்தி பரவிய பிறகு, அதனை பார்ப்பதற்காக தேவநாகரே மாவட்டத்தில் நெல்லூர் கிராமத்தில் உள்ள சையத் நூரின் வீட்டுக்கு பலரும் வந்து செல்கின்றனர்.

"இது நம்புவதற்கு கடினமாக உள்ளது" என்று கர்நாடகா கால்நடை, மீன்வள பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் முகமது நதீம் ஃபெரோஸ் கூறுகிறார்.

இதை அவர்கள் நம்பாததற்கு முக்கிய காரணம், முட்டையின் நிறம் வழக்கமான வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இல்லை. மத்தியப் பிரதேச காடுகளில் காணப்படும் கடக்நாத் இனத்தைச் சேர்ந்த கருப்பு கோழி இடுவது போல கருப்பு நிறமாகவும் இல்லை.

பேராசிரியர் நதீம் ஃபெரோஸ் பொதுவாக நான்கு வகையான கோழிகள் உள்ளன என்று விளக்குகிறார். ஆசிய இனம் (இந்தியாவில் பிரபலமான அசீல் இனம் போன்றவை), ஆங்கில இனம் (கார்னிஷ் என்று அழைக்கப்படுகிறது), மத்திய கிழக்கில் காணப்படும் இனம் (லேயர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன, இந்த கோழிகள் வெள்ளை முட்டையிடுகின்றன) மற்றும் அமெரிக்க இனம்.

கோழி நீல நிற முட்டை முட்டையிட்டது ஏன்?

பட மூலாதாரம், SYED NOOR

"மைனா போன்ற சுமார் 10 முதல் 15 பறவைகள் நீல நிற முட்டைகளை இடுகின்றன", என்று தேவநாகரே மாவட்டத்தின் சன்னகிரி தாலுகாவின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் துறையின் உதவி இயக்குநர் டாக்டர் அசோக் குமார் ஜிபி கூறுகிறார்.

"ஆனால் இந்த நீல முட்டை ஒரு அரிய நிகழ்வாகும், இது இந்தியாவில் அசாதாரணமானது" என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் அசோக், "இந்த இனத்தின் கோழிகள் ஒரு வருடத்தில் 100 முதல் 126 முட்டைகளை இடுகின்றன. இந்த கோழிகள் தொடர்ந்து 10 நாட்கள் தினமும் ஒரு முட்டை இட்டு, அடுத்த 15 நாட்களுக்கு முட்டையிடாது. இதற்குப் பிறகு, அவை தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு முட்டையிடும்" என்று கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் விளக்கிய டாக்டர் அசோக், "நாங்கள் இந்த கோழியை கண்காணித்து வருகிறோம், துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவோம். உடலில் உள்ள கல்லீரல் பிலிவெர்டின் எனப்படும் பித்த நிறமியை சுரக்கிறது. இது அதிக அளவில் சுரந்து முட்டை ஓட்டில் படிந்திருக்கலாம்" என்றார்.

"இதை உறுதிப்படுத்த, நாங்கள் மீண்டும் மீண்டும் சரிபார்க்க வேண்டும், கோழி நம் கண்முன் முட்டையிடுவது முக்கியம். அப்போதுதான் எதையும் உறுதி செய்து அதன் ரத்தத்தையும் ஓட்டையும் சோதனைக்கு அனுப்ப முடியும். முட்டை ஓடு ஏன், எப்படி நீல நிறமாக மாறியது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்" என்கிறார்.

டாக்டர் அசோக் கூறுகையில், "இந்த கோழியை கண்காணிப்பில் வைக்குமாறு சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கூறியுள்ளோம். ஆனால் அது நீல நிற முட்டையிட்டால் மட்டுமே எங்களால் சோதிக்க முடியும்" என்றார்.

முட்டை ஏன் நீல நிறமாக மாறியது என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் வரை சையத் நூர் அந்த "நீல முட்டையை" குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு