அமெரிக்காவில் இருந்து இந்தியாவை மீண்டும் சீண்டிய அசிம் முனீர் - என்ன சென்னார்?
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரின் அணு ஆயுதப் போர் குறித்த சமீபத்திய பேச்சு, இந்திய அரசியல் மட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பேச்சுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அணு ஆயுத தாக்குதல் குறித்து அச்சுறுத்துவது பாகிஸ்தானின் வழக்கமாகிவிட்டது எனவும் இந்தியா கூறியுள்ளது. இந்தியா காட்டமாக விமர்சிக்கும் அளவுக்கு அசிம் முனீர் கூறியது என்ன? இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? சுருக்கமாகப் பார்க்கலாம்.
அசிம் முனீர் பேசியது என்ன?
பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு பயணம் சென்றுள்ளார். ஃப்லோரிடாவில் உள்ள தம்புராவில் புலம்பெயர் பாகிஸ்தான் மக்களிடையே சமீபத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, இந்தியா 'விஸ்வ குரு' என்று கூறிக் கொள்கிறது, ஆனால் அது உண்மையல்ல என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் உளவு அமைப்பான RAW 'சர்வதேச பயங்கரவாதத்தில்' ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், மேலும் இது தொடர்பாக 'கனடாவில் ஒரு சீக்கியத் தலைவர் கொலை செய்யப்பட்டது, கத்தாரில் எட்டு கடற்படை அதிகாரிகள் உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் மற்றும் குல்பூஷன் ஜாதவ் வழக்கு' போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிட்டதாக தி பிரிண்ட் ஊடகம் கூறுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இந்தியா ஏற்கனவே மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக அவர் பேசும்போது, 'சிந்து நதி இந்தியாவின் சொத்து அல்ல, இந்தியா அணையை கட்டுவதற்காக காத்திருக்கிறோம், அவ்வாறு செய்தால் 10 ஏவுகணைகளை கொண்டு அதனை தகர்ப்போம்' என அசிம் முனீர் பேசியதாகவும் தி பிரிண்ட் குறிப்பிட்டது.
இதேபோல், எதிர்காலத்தில் இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் பாகிஸ்தான் அணு ஆயுதப் போரை முடுக்கிவிடும் என அவர் பேசியதாகவும் தி பிரிண்ட் கூறியது.
இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் செல்போன்கள் அல்லது பிற டிஜிட்டல் சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் இருந்து அசிம் முனீரின் உரையை அறிந்துகொண்டதாகவும் தி பிரிண்ட் தெரிவித்துள்ளது.
அணு ஆயுத எச்சரிக்கை விடுக்கும் விதமாக அசிம் முனீர் பேசியதாக கூறப்படும் விவகாரம் இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை என்ன கூறியது?
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்கப் பயணம் செய்திருந்தபோது பேசிய கருத்துக்கள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. "அணு ஆயுத தாக்குதல் குறித்து அச்சுறுத்துவது பாகிஸ்தானின் வழக்கமாகிவிட்டது" என்று தெரிவித்தது.
"இவை எவ்வளவு பொறுப்பற்ற பேச்சு என்று சர்வதேச சமூகம் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடும். பயங்கரவாதிகளுடன் நட்புறவில் உள்ள ராணுவத்தைக் கொண்டுள்ள நாட்டிடம் அணு ஆயுதங்களின் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் நம்ப முடியாது என்ற சந்தேகத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், "இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்குப் பணியாது என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். தேசியப் பாதுகாப்புக்காக அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" என்றும் தனது அறிக்கையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கைக்கு பாகிஸ்தான் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் அணு ஆயுத மிரட்டல் குறித்த குற்றச்சாட்டு தவறாக வழிநடத்தும் மற்றும் சுயநல நோக்கமுடையது. பாகிஸ்தான் படைபலத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது அதைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதையோ உறுதியாக எதிர்க்கிறது" என்று தெரிவித்தது.
"பாகிஸ்தான் முழுமையான மக்கள் கட்டுப்பாட்டின் கீழ் விரிவான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்ட ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். இது எப்போதும் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவேகத்துடனும் ஒழுக்கத்துடனும் கையாண்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அசிம் முனீரின் பேச்சை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் முன்னாள் அதிகாரியான Michael Rubin விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகத்திடம் பேசிய அவர், "அமெரிக்க மண்ணில் இருந்து பாகிஸ்தான் விடுக்கும் மிரட்டல்கள் முற்றிலும் ஏற்க முடியாதவை. பாகிஸ்தானை நோட்டோ அல்லாத முக்கிய கூட்டாளியாக கருத எவ்வித காரணங்களும் இல்லை. பாகிஸ்தான், 'தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு' பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய முதல் முக்கிய 'நேட்டோ அல்லாத கூட்டாளர்' ஆக இருக்க வேண்டும், மேலும் இனி அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகத்தின் உறுப்பினராக அது இருக்கக் கூடாது' என அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, மே 6-ஆம் தேதி இரவு இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்ததாக இந்தியா கூறியது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல்கள் நடைபெற்றன.
மே 10-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு சண்டை நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது, ஆனால் இந்தியா அதனை ஒட்டுமொத்தமாக நிராகரித்தது.
அசிம் முனீர் கருத்துக்கள் இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்துவது இது முதல்முறையல்ல, பஹல்காம் தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக, காஷ்மீரை தங்களின் தொண்டடைக் குருதிக்குழாய் என முனீர் பேசியிருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
'தொண்டைக் குருதிக்குழாய் எப்படி வெளிநாட்டில் இருக்க முடியும். அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானுடன் இதற்குள்ள ஒரே தொடர்பு, அந்த நாடு சட்டவிரோதமாக கைப்பற்றிய பகுதிகளை அகற்றுவதுதான்' என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



