காணொளி: தாலிபன் அமைச்சர் இந்தியா வந்த வேளையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல் ஏன்?

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் மோதல்
காணொளி: தாலிபன் அமைச்சர் இந்தியா வந்த வேளையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல் ஏன்?

ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் எல்லையில், மோதல் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தாலிபன்களுக்கும் இடையில் இந்த சண்டை நடைபெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாக தாலிபன் கூறுகிறது, ஆனால் பாகிஸ்தான் 23 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கைகளை பிபிசி சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலை வியாழக்கிழமை நடத்தியிருந்தது. அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோதல் நடைபெற்றதாக தாலிபன் கூறுகிறது.

தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி இந்தியப் பயணத்தைத் தொடங்கிய நாளில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இது அவரது இந்தியப் பயணத்தின் முதல் நாள்.

முத்தக்கியின் டெல்லி பயணத்தின் போது நடந்திருக்கும் இந்த தாக்குதல்களின் நேரம் குறித்து ஆப்கான் ஆய்வாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணுசக்தி திறன் கொண்ட அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு 'பினாமி மோதலின்' (Proxy Conflict) களமாக மாறக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரங்கீன் தத்ஃபர் ஸ்பாந்தா தனது எக்ஸ் பக்கத்தில் எழுதுகையில், "ஆப்கானிஸ்தான் குறித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கொள்கை அமைதியை நோக்கியதாக இல்லை, மாறாகப் பினாமி சக்திகளை முன்னோக்கி நகர்த்துவதாக உள்ளது என்று முத்தக்கியின் டெல்லி பயணத்திற்கு முன்பே நான் கூறியிருந்தேன்."

"பாகிஸ்தான் முன்னர் தாலிபனின் விசுவாசமான கூட்டாளியாக இருந்தது. இப்போது இந்திய அரசாங்கத்தின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் தாலிபனை ஆதரிக்கின்றனர். இந்தச் சண்டையில் நமது மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் பிலால் சர்வேரியும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ள நேரம் குறித்துக் கவனத்தை ஈர்த்து, பாகிஸ்தான் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களை போலல்லாமல் இந்தத் தாக்குதல் "தலைநகரின் இதயப் பகுதியில்" நடந்துள்ளது என்று கூறினார்.

"தாக்குதல் நடத்த இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் பாகிஸ்தான் நேரடியாக ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் செல்வாக்கை காட்டுவதுடன், இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானுக்கு அதிகரித்து வரும் நெருக்கம் குறித்து அதன் கவலையையும் இந்த தாக்குதல் உணர்த்துகிறது," என்று அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி செய்தியாளர் சினேகாவிடம் பேசிய இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரி வீணா சிக்ரி, இந்தத் தாக்குதலின் மூலம் தாலிபான் வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம் குறித்து ஆப்கானிஸ்தான் மீதான தனது அதிருப்தியைப் பாகிஸ்தான் காட்டுகிறது என்றார்.

அத்துடன், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை அவர் 'தவறானது' என்றும் கூறினார்.

"இஸ்ரேல் தோஹா மீது தாக்குதல் நடத்தியபோது மத்திய கிழக்கு நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் மிகவும் கோபமடைந்தது. எனவே, பாகிஸ்தான் காபூல் மீது தாக்குதல் நடத்தலாமா என்ற கேள்விக்கே இடமில்லை. பாகிஸ்தான் காபூல் மீது தாக்குதல் நடத்தியது தவறு. இது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று வீணா சிக்ரி கூறுகிறார்.

"ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஏன் இந்தியாவுக்கு வந்தார் என்ற தங்கள் அதிருப்தியை ஒரு வகையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்குத் தெரிவிக்கிறது." என்றும் அவர் மேலும் கூறினார்.

செளதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து செளதி அரேபியா இந்த பதற்றத்திற்கு எவ்வாறு பதிலளிக்கும் என்று வீணா சிக்ரியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு உறவுகள் மிகவும் பழமையானவை. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தை வேறு வழியில் பார்க்கக்கூடாது. அதை ஒரு 'பொருளாதார பரிவர்த்தனை' ஒப்பந்தமாக மட்டுமே பார்க்க வேண்டும்" என கூறினார்.

"செளதி அரேபியா தனது தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இந்தியா மற்றும் செளதி அரேபியாவிற்கு இடையே உறவுகள் உள்ளன. இதைத் தவிர, செளதி அரேபியாவிற்கு மற்ற நாடுகளுடனும் உறவுகள் உள்ளன. இந்தியாவுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படாது என்று செளதி அரேபிய அரசாங்கம் கூறியுள்ளது," என்றும் அவர் கூறினார்.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு